Last Updated : 28 Apr, 2023 10:36 AM

 

Published : 28 Apr 2023 10:36 AM
Last Updated : 28 Apr 2023 10:36 AM

சித்திரை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: நெரிசலை சமாளிக்க கூடுதல் கவனம் செலுத்தப்படுமா?

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் அதிக அளவிலான பக்தர்கள் திரள்வது வழக்கம்.

குறிப்பாக தல்லாகுளம், கோரிப்பாளையம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா, கடந்த ஏப்.23-ல் தொடங்கி நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபவம் மே 5-ம் தேதி அதிகாலை நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, மாநகர் காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்தாண்டு வைகையில் கள்ளழகர் இறங்கும் போது கோரிப்பாளையம் பகுதியில் திரண்ட கட்டுக் கடங்காத கூட்டத்தால் நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழக சட்டப்பேரவை வரை எதிரொலித்தது. அதனால் இந்தாண்டு கோரிப்பாளையம் பகுதியில் நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், கோரிப்பாளையம் பகுதியில் அதிகமான சிசிடிவி கேமரா பொருத்துதல், நவீன வசதி கொண்ட ட்ரோன் கண்காணிப்பு, கூட்டம் திரளாமல் எந்தெந்த வழியில் பக்தர்களை பிரித்து அனுப்புவது போன்றமுன்னேற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பக்தர்கள் சிலர் கூறியதாவது: கரோனாவால் 2 ஆண்டுகள் கழித்து மக்கள் பங் கேற்புடன் சித்திரை திருவிழா நடந்தது. இதனால், கடந்த ஆண்டுகள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை காணும் ஆர்வத்தில் நாலாபுறமும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் முண்டிய டித்து ஆற்றை நோக்கி சென்றனர்.

பனகல் சாலை, மீனாட்சி கல்லூரி சாலை, மேளகாரத் தெரு, கோரிப்பாளையம் என பல முனையிலும் இருந்து பக்தர்கள் வைகையை நோக்கி சென்றனர். ஆழ்வார்புரம் இறக்கம், ஏவி மேம்பாலம் சந்திப்பில் திடீரென காவல்துறையினர் தடுப்பு வேலிகளை வைத்ததால் பக்தர்கள் திக்குமுக்காடினர். எந்த வழியில் வெளியேறுவது எனத் தெரியாமல் தவித்த நிலையில் 2 பக்தர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

இந்த ஆண்டும் கோரிப்பாளையம் பகுதியில் பக்தர்கள் அதிகமாக திரளும் வாய்ப்புள்ளது. கூட்ட நெரிசலை சீரமைக்க காவல்துறையினர் அலட்சியமின்றி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சுவாமியை பார்க்க, வைகை ஆற்றுப் பகுதியில்மக்கள் எந்தெந்த வழியில் செல்ல வேண்டும் என, முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். கூட்டம் அதிகமான பகுதியில் அனுபவம் மிக்க உள்ளூர் போலீஸாரை நிறுத்துதல், மைக் மூலம் தொடர்ந்து அறிவுறுத்துதல் போன்றவற்றை காவல்துறை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

காவல் துணை ஆணையர் சாய் பிரனீத் கூறியதாவது: கடந்த காலங்களில் கோரிப்பாளையம் பகுதியில் திருவிழா முன்னேற்பாடுகள், கூட்ட நெரிசலை சமாளிப்பது போன்ற திட்டங்களை ஆய்வு செய்கிறோம். இதுபோன்ற விழாக்களில் கூட்டத்தைக் கணிக்க முடியாது என்றாலும், பக்தர்கள் அதிகரிக்கும்போது, எப்படி சமாளிப்பது என்பதில் காவல்ஆணையர் நரேந்திரன் நாயர் உள்ளிட்ட அதிகாரிகளின் ஆலோசனை களை பெற்றுள்ளோம்.

இம்முறை நவீன வசதியுடன் கூடிய சுமார் 1 மணி நேரம் வரை பறந்து கண்காணிக்கும் கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன் ஏற்பாடு செய்துள்ளோம். இதன்மூலம் கூட்டத்தை கண்காணித்து அதற்கேற்ப சீரமைக்க திட்டமிட்டு வருகிறோம். வெளியூர்களில் இருந்து கூடுதல் போலீஸாரை வரவழைக்க உள்ளோம். பக்தர்கள் இடையூறின்றி கள்ளழகரை தரிசிக்க ஏற்பாடு செய் வோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x