Published : 27 Apr 2023 11:59 PM
Last Updated : 27 Apr 2023 11:59 PM
பழநி: பழநியில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க நீச்சல் குளத்தில் யானை கஸ்தூரி ஆனந்த குளியல் போட்டது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு கடந்த 49 ஆண்டுகளுக்கு முன்பு 8 வயதில் கஸ்தூரி யானை வந்தது. யானை கஸ்தூரி பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள காரமடை தோட்டத்தில் வளர்க்கப்படுகிறது. தற்போது 57 வயதாகும் கஸ்தூரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்களில் பங்கேற்கிறது. பழநியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் நெருக்கமான யானையாக கஸ்தூரி திகழ்கிறது.
பழநியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்தாலும் பகலில் வாட்டி வதைக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் சிரமப்படுகின்றன.
அதனால் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க கஸ்தூரி யானை காலையில் சாதாரண குளியல், மாலையில் நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் என தினமும் 2 வேளை குளிக்க வைக்கப்படுகிறது.
இதற்காக, காரமடை தோட்டத்தில் ரூ.10 லட்சத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் யானை கஸ்தூரி நீச்சல் அடித்தும், மூழ்கி குளித்தும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆனந்த குளியல் போட்டது.
இதுமட்டுமின்றி, யானை குளிப்பதற்காக பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் ‘ஷவர் பாத்’ அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து யானைப் பாகன் பிரசாந்த் கூறுகையில், "தினமும் காலை 9 மணி மற்றும் மாலை 3 மணி என இருவேளை யானை குளிக்க வைக்கப்படுகிறது. நீச்சல் குளத்தில் குளிக்க யானை அதிக ஆர்வம் காட்டும். குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆனந்த குளியல் போடும். குளியலுக்கு பின் உணவு வழங்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT