Published : 27 Apr 2023 09:54 PM
Last Updated : 27 Apr 2023 09:54 PM
சென்னை: டெல்லி செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த முதல்வர் ஸ்டாலின், மீண்டும் வீடு திரும்பினார். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர் மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும்6 மேல் தளங்களுடன் சுமார் 51,429சதுரமீட்டர் பரப்பில் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், குடல் - இரைப்பை,புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சை துறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கருணாநிதி நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார்.
இதற்காக இரவு சுமார் 7 மணி அளவில் சென்னை விமான நிலையம் சென்றார். அமைச்சர்கள், அதிகாரிகள் அவரை வழியனுப்பி வைத்தனர். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்லாமல் வீடு திரும்பியுள்ளார். அவர் டெல்லி பயணம் செய்ய இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமான நிலையத்திலேயே சுமார் ஒன்றரை மணிநேரம் காத்திருந்தார். பின்னர் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், காத்திருப்புக்கு பின் மீண்டும் வீடு திரும்பினார்.
எனினும், நாளை காலை 6 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT