Published : 27 Apr 2023 04:31 AM
Last Updated : 27 Apr 2023 04:31 AM

50 வயதுக்கு மேற்பட்ட அரசு வாகன ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை - அரசாணை வெளியீடு

கோப்புப்படம்

சென்னை: மருத்துவ நிபுணர் குழு அளித்த பரிந்துரையை ஏற்று, 50 வயதுக்கு மேற்பட்ட அரசு வாகன ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மனிதவள மேலாண்மைத் துறை செயலர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த 1996-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு வாகனங்களின் ஓட்டுநர்கள்அனைவருக்கும் மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்கியதுடன், 40 வயதுக்கு கீழ் பரிசோதனை வேண்டாம் என்றும், 40 முதல் 52 வயது வரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 52 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒருமுறையும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.

இதற்காக சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டன. கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் கண்டறியப்பட்டால், அவர்கள் அப்பணியில் தொடர அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதற்குப் பதிலாக உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் என அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப பணியானது அதே சம்பளத்தில் வழங்கப்படுகிறது. இதற்காக கடந்த 2007-ம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.

கண் பார்வை, கேட்கும் திறன்: இதற்கிடையே கடந்த 2018-ம்ஆண்டில், பணியாளர் நலத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது, உடல் தகுதி சான்றிதழுடன், கண் பார்வை, கேட்கும் திறன் ஆகியவற்றையும், பொதுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் பணியாற்றும் அரசு வாகன ஓட்டுநர்களிடம் கேட்டுப் பெற வேண்டும்.

குறிப்பாக 40 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒருமுறையும், 40 வயதுக்கு கீழ் 2 ஆண்டுக்கு ஒருமுறையும் இதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் துறை செயலர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில், கடந்த 2022-ம் ஆண்டு மருத்துவக்கல்வி இயக்குநர் மற்றும் எழும்பூர் கண் மருத்துவமனை இயக்குநர் ஆகியோர், மருத்துவ நிபுணர்களுடன் நடத்திய ஆலோசனையின்படி, அரசுக்கு எழுதிய கடிதத்தில், அரசு வாகன ஓட்டுநர்களுக்கு 50 வயதுக்கு கீழ் என்றால் 2 ஆண்டுக்கு ஒருமுறையும், 50 வயதுக்கு மேல் என்றால் ஆண்டுக்கு ஒரு முறையும் கண்பார்வை, கேட்கும் திறன், பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.

இந்த பரிந்துரையை ஏற்ற தமிழக அரசு, 50 வயதுக்கு கீழ் 2 ஆண்டுக்கு ஒருமுறையும், 50 வயதுக்கு மேல் இருந்தால் ஆண்டுக்கு ஒருமுறையும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு வாகன ஓட்டுநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

கல்வித்தகுதி அடிப்படையில்...: மேலும், ஓட்டுநர் கண்பார்வை பிரச்சினை அல்லது வேறு பிரச்சினைகளால் வாகனம் ஓட்டத் தகுதியற்றவர் என்று மருத்துவரால் அறிவிக்கப்பட்டால், அரசு ஊழியர்களுக்கான அடிப்படை விதிகளின் படி அவர்களின் கல்வித்தகுதி மற்றும் அவர் பெறும் ஊதிய விகித அடிப்படையில் வேறு பணி வழங்கப்படும்.

இவ்வாறு மனிதவள மேலாண்மைத் துறை செயலர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x