Published : 27 Apr 2023 06:16 AM
Last Updated : 27 Apr 2023 06:16 AM
தஞ்சாவூர் / கும்பகோணம்: காவிரி டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு சிறப்பு தூர்வாரும் பணிக்காக தமிழக அரசு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தப் பணிகளை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை மாவட்டந்தோறும் கண்காணிப்பு அதிகாரிகளாக தமிழக அரசு நியமித்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 37 ஆறுகள், 1,970 கி.மீ தொலைவுக்கும், 21,629 கிளை வாய்க்கால்கள் 24,524 கி.மீ தொலைவுக்கும் அமைந்துள்ளன. இதுதவிர, 924 முறை சார்ந்த ஏரிகளும், 1,428 முறை சாராத ஏரிகளும் உள்ளன. இதில் ஏரிகள் மூலம் பாசனம் பெறும் வாய்க்கால்களின் தொலைவு 2,700 கி.மீ ஆகும்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிக்கும் சென்று சேரும் வகையில், தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதன்படி, நிகழாண்டு டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், காவிரி பாசனப் பகுதிகளான திருச்சி மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் 636 தூர்வாரும் பணிகளை 4,004 கி.மீ தொலைவுக்கு மேற்கொள்ள ரூ.80 கோடியும், சென்னை மண்டலத்துக்குட்பட்ட கடலூர் மாவட்டத்தில் 55 பணிகளை 768 கி.மீ தொலைவுக்கு மேற்கொள்ள ரூ.10 கோடியும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி, தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் திருச்சி மண்டலத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல்,திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் சிறப்பு தூர் வாரும் பணிகள் நடைபெற உள்ளன.
மேலும், இந்த தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அரியலூர் மாவட்டத்துக்கு ரமேஷ் சந்த் மீனா, கடலூர் - அன்சுல் மிஸ்ரா, கரூர்- கே.எஸ்.பழனிசாமி, மயிலாடுதுறை- வே.அமுதவல்லி, நாமக்கல்- சா.விஜய ராஜ்குமார், பெரம்பலூர்- அனில் மேஷ்ராம், புதுக்கோட்டை- சு.கணேஷ், சேலம்- இல.சுப்பிரமணியன், தஞ்சாவூர்- த.ஆனந்த், திருச்சி- க.மணிவாசன், திருவாரூர்- இல.நிர்மல்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கான பணிகள் குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா கலந்தாலோசனை நடத்தினார். மேலும், மற்ற மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் அனந்த காவிரி வாய்க்கால் தூர் வாரும் பணியை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று(ஏப்.27) தொடங்கி வைக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT