Published : 04 Sep 2017 11:15 AM
Last Updated : 04 Sep 2017 11:15 AM
திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ள தஞ்சாவூர் குளத்தெருவில் நேற்று நேரிட்ட கட்டிட விபத்து, கடந்த 2 ஆண்டுகளில் உயிர்ப்பலி வாங்கிய 3-வது பெரிய சம்பவமாகும். இதற்கு, மாநகராட்சி அலுவலர்களின் அலட்சியப்போக்கே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் 2015-ம் ஆண்டு அக்.24-ல் 4 தளங்கள் கொண்ட பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில், வாடகைதாரர் பஷீர் அகமது என்பவர் இடிபாடுகளில் சிக்கி பலியானார். மேலும், கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
தரைத்தளத்தில் போதிய தாங்குதிறன் இல்லாமல் இருந்த 2 மாடிக் கட்டிடத்தில் விபத்து நேரிடுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன் 3, 4-வது தளங்களை அதன் உரிமையாளர் கட்டியுள்ளார். பின்னர், விபத்து நேரிடுவதற்கு 2 நாட்களுக்கு முன் ஆழ்குழாய் கிணறு அமைத்தபோது நேரிட்ட அதிர்ச்சியில் வீட்டின் தரைத்தள சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பின்னர், கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. கட்டிட விரிவாக்கப் பணிகளை மாநகராட்சி அலுவலர்கள் கண்டு கொள்ளாததாலேயே இந்த விபத்து நேரிட்டது.
இதேபோல, ஸ்ரீரங்கம் மேல உத்தரவீதியில் 2015-ம் ஆண்டு டிச.23-ல் பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் அமைக்கும் பணி நடைபெற்றபோது, அருகிலிருந்த பழைய வீடு சரிந்து விழுந்ததில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் காயமடைந்தனர்.
இந்தநிலையில், தற்போது 3-வதாக நேற்று 3 மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமாகி 4 பேர் பலியாகியுள்ளனர்.
1,300 சதுர அடியில் இருந்த 3 மாடிக் கட்டிடத்தின் தரைத்தளம் செம்மண்ணால் கட்டப்பட்டுள்ளது. பின்னர், 15 ஆண்டுகளுக்கு முன் கான்கிரீட் கலவையால் மேல்தளங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடத்துக்கு முன்பகுதியில் 900 சதுர அடியில் மற்றொரு கட்டிடம் இருந்துள்ளது. இது, 3 மாடிக் கட்டிடத்துக்கு பாதுகாப்பாக இருந்துள்ளது.
இந்தநிலையில், 900 சதுர அடியில் இருந்த கட்டிடத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் வாங்கியவர், புதிய வீடு கட்டும் நோக்கில் ஓரிரு மாதங்களுக்கு முன் இடித்து அகற்றியுள்ளார். இதனால், 3 மாடிக் கட்டிடத்தின் முன் திறந்தவெளியாக இருந்துள் ளது.இந்தநிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையில், 3 மாடிக் கட்டிடத்தின் தரைத்தளம் நன்கு ஊறியிருந்த நிலையில், நேற்று காலை இடிந்து தரைமட்டமானது.
அலட்சிய அதிகாரிகள்
ஒரு கட்டிடத்தை இடிக்கவும், அதை விரிவுப்படுத்தவும் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பு நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டியது அவசியம். இதுபோன்ற பணிகளுக்கு உத்தரவு அளிக்கும்போது பின்விளைவுகள் குறித்து ஆய்வு நடத்தி அதன்பிறகே உரிய தீர்வை வழங்க வேண்டும். ஆனால், 900 சதுர அடியில் இருந்த கட்டிடத்தை இடிப்பதற்கு அனுமதி வழங்கியபோது சுற்றுப்பகுதியில் நெருக்கமாக உள்ள பிற கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து மாநகராட்சி அலுவலர்கள் கவனத்தில் கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததே 3 மாடிக் கட்டிட விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்ற னர்.
இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நேரிடாமல் இருக்கும் வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுதொடர்பாக கட்டிட விபத்து நேரிட்ட இடத்தைப் பார்வையிட வந்த அமைச்சர் என்.நடராஜன், மாவட்ட ஆட்சியர் கு.ராஜமணி, திருச்சி எம்பி ப.குமார் ஆகியோர் கூறியது:
வீடு இடிந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும். மேலும், திருச்சி மாநகராட்சிப் பகுதியில் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ள கட்டிடங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் மூலம் ஒன்றரை மாதங்களுக்குள் முழுமையான ஆய்வு நடத்தி, தொடர்புடைய கட்டிடத்தை இடித்து அகற்றவோ அல்லது உரிய பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தவோ நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விவகாரம் குறித்து முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்று அமைச்சர் தலைமையில் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் அடங்கிய முழுமையான ஆய்வுக் கூட்டம் நடத்தி, இனி இதுபோன்ற சம்பவம் நேரிடாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT