Published : 27 Apr 2023 02:11 AM
Last Updated : 27 Apr 2023 02:11 AM
சிவகாசி: சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஸ்ரீ காளீஸ்வரி குழுமத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உரை வெளியிடும் விழா நேற்று நடைபெற்றது. ஶ்ரீ காளீஸ்வரி குழும இயக்குனர் சண்முகநாதன் வரவேற்றார். இயக்குனர் ஏ.பி.செல்வராஜன் முன்னிலை வகித்தார்.
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, இந்திய அஞ்சல் துறை தமிழக தென்மண்டல தலைவர் ஜெய்சங்கர், பெங்களூருவில் உள்ள உடுப்பி ராமச்சந்திர ராவ் விண்வெளி ஆய்வு மைய துணை இயக்குனர் வெங்கடேஸ்வர சர்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஸ்ரீ காளீஸ்வரி குழுமத்தின் நூற்றாண்டு நினைவு அஞ்சல் உரையை தென்மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜெய்சங்கர் வெளியிட மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பெற்றுக் கொண்டார்.
விழாவில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசுகையில், ''சிவகாசி பகுதியில் 1920களில் விவசாயத் தொழில் பிரதானமாக இருந்து வந்தது. சிவகாசியை சேர்ந்த அய்யநாடார், சண்முக நாடார் ஆகியோரால் சிவகாசியில் தீப்பெட்டி தொழில் தொடங்கப்பட்டது. 1923ம் ஆண்டு சண்முக நாடார் ஶ்ரீ காளீஸ்வரி தீப்பெட்டி நிறுவனத்தை தொடங்கினார்.
தற்போது நூற்றாண்டு விழா கொண்டாடும் ஶ்ரீ காளீஸ்வரி குழுமம் 40க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுடன் பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. தமிழகம் இந்தியாவில் முக்கியமான மாநிலம். சிவகாசி பட்டாசு இந்திய அளவில் பிரசித்தி பெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை வளர்ச்சி பாதையில் முன்னேற்றி வருகிறார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமூகத்தினர், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் என அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செயல்பட்டு வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தொழில்துறையினருக்கு ஆதரவாக உள்ளது. சிவகாசியில் உள்ள தொழில்துறையினருக்கு எந்த பிரச்சனை என்றாலும், எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசை அணுகுங்கள், மத்திய அரசு உதவி செய்ய தயாராக உள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT