Published : 26 Apr 2023 09:27 PM
Last Updated : 26 Apr 2023 09:27 PM
ராமேசுவரம்: கச்சத்தீவில் இலங்கை கடற்படை வீரர்கள் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகள் அகற்றப்பட்டுவிட்டதாக யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜோசப்தாஸ் ஜெபரத்ணம் தெரிவித்துள்ளார்.
இந்திய-இலங்கை நாட்டு மக்களின் சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் கச்சத்தீவில் இலங்கை கடற்படையினர் 2 புத்தர் சிலைகளை திடீரென நிறுவியது இரு நாட்டு பக்தர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக இலங்கை கடற்படை, ''கச்சத்தீவில் இலங்கை கடற்படையின் முகாம் அமைந்துள்ளது. கடற்படையில் பணியாற்றுபவர்கள் பெரும்பான்மையானோர் பவுத்தர்கள் என்பதால் அவர்களின் மத வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக சிறிய புத்தர் சிலைகள் கச்சத்தீவு கடற்படை முகாம் அருகே வைத்து மத வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.
மேலும் கச்சத்தீவில் அந்தோணியார் தேவாலயத்தைத் தவிர கச்சத்தீவில் வேறு எந்த நிரந்தரக் கட்டுமானமும் மேற்கொள்ள முடியாது. வேறு எந்த மத வழிப்பாட்டுத் தலமும் இல்லை. எதிர்காலத்தில் எந்தவொரு புத்த விகாரையும் நிர்மாணிக்கும் முயற்சிகளும் கடற்படையினரால் மேற்கொள்ளப்படாது, என தெரிவிக்கப்பட்டிருந்தது'' என விளக்கம் அளித்திருந்தது.
இத்தனை ஆண்டு காலமாக கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயம் மட்டுமே இருந்து வந்தநிலையில், கச்சத்தீவில் பிற மதத்தினரும் ஆலயங்களை நிறுவி வழிபடத் தொடங்கினால் மத நல்லிணக்கம் பாதிக்கப்படுவதுடன் மத மோதல்களும் ஏற்படும், 2 நாட்டு மக்களிடையேயான சுமுக உறவைப் பாதிக்கும் எனவும் இந்த புத்தர் சிலைகளை உடனே அகற்ற வேண்டும் எனவும் இந்திய-இலங்கையைச் சேர்ந்த அரசியல்வாதிகளும், பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜோசப்தாஸ் ஜெபரத்ணம் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் சிவபாலசுந்தரனுக்கு எழுதிய நன்றி கடிதத்தில் கூறியிருப்பதாவது: "கச்சதீவில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகள் அகற்றப்பட்டுவிட்டு, கச்சதீவுக்கு வெளியே கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாக இலங்கையின் கடற்படையின் உயர் அதிகாரிகளுக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திற்கு தெரிவித்துள்ளார்கள்.
புனித அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ள கச்சதீவில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் கடந்த 27-03-2023ல் அன்று கடிதம் எழுதியிருந்தேன். கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட குரல் கொடுத்த அனைவருக்கும் , அமையான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் மாவட்ட நிர்வாகத்திற்கும், கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT