Published : 26 Apr 2023 06:32 PM
Last Updated : 26 Apr 2023 06:32 PM
சென்னை: தொழிலாளர் சட்டத் தொகுப்புகளிலுள்ள தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரான பகுதிகளை நீக்கிட மத்திய அரசை வலியுறுத்துமாறு தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்ததற்காக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கான விதிகளை அறிவிக்கை செய்வதற்குமுன் அவற்றிலுள்ள தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரான பகுதிகளைக் களைய வேண்டுமென இந்திய ஒன்றிய அரசைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
தொழிலாளர் மற்றும் தொழிற்சாலைகள் தொடர்பான 29 சட்டங்களையும் மாற்றி புதிய நான்கு சட்டத் தொகுப்புகளாக இந்திய ஒன்றிய பாஜக அரசு கடந்த 2020 ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையைப் புறக்கணித்திருந்த நாட்களில் எவ்வித விவாதமும் இல்லாமல் அந்த தொகுப்புகள் நிறைவேற்றப்பட்டன. நீண்ட நெடுங்காலமாகப் போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் பல வரையறைகள் அந்தத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. இதனை திமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அப்போதே சுட்டிக்காட்டியதோடு தத்தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தின.
இந்நிலையில், அத்தொகுப்புகளுக்கான விதிகளை ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கிறது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அவ்விதிகள் தமிழ்நாடு, கேரளா உட்பட பெரும்பாலான மாநிலங்களில் வரைவு விதிகளாக பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டு வெளியிடப்பட்டுள்ளன. கூடிய விரைவில் இந்த விதிகளை அறிவிப்பு செய்வோம் என்றே ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அவ்வாறு அறிவிக்கை செய்துவிட்டால் நான்கு சட்டத் தொகுப்புகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ள 29 சட்டங்களும் தாமாகவே காலாவதி ஆகிவிடும்.
தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சட்டத் திருத்தத்துக்கு எதிர்காலமே இல்லை என்னும் நிலையில், இந்த சட்டத் திருத்தம் செய்யப்பட்டது ஏனென்று விளங்கவில்லை. இதில் உரிய கவனம் செலுத்தப்பட்டிருந்தால், சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதையும், அதனால் எழுந்த எதிர்மறையான விமர்சனங்களையும் தவிர்த்திருக்க முடியும்.
எனினும், இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசு 2022 ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டுள்ள இந்த நான்கு சட்டத் தொகுப்புகளுக்கான வரைவு விதிகளை அறிவிக்கை செய்வதற்கு முன்பு அவற்றில் இடம் பெற்றுள்ள தொழிலாளர் நலன்களுக்கு எதிரான பகுதிகளை நீக்கிவிட்டு அறிவிக்குமாறு இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT