Published : 26 Apr 2023 06:24 PM
Last Updated : 26 Apr 2023 06:24 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏ வீட்டின் முன்பு குழந்தைகளுடன் முதல் மனைவி போராட்டம் நடத்தினார். போலீஸார் புகார் வாங்காமல் அலைக்கழித்தனர். இவ்விவகாரத்தை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாக எம்எல்ஏ தரப்பில் குறிப்பிடுகின்றனர்.
புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி பாஜக எம்எல்ஏவாக கல்யாணசுந்தரம் உள்ளார். இவர் கடந்த 2011-ல் என்.ஆர்.காங்கிரஸில் போட்டியிட்டு கல்வியமைச்சராக இருந்தார். அப்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தனித்தேர்வராக விண்ணப்பித்து ஆள்மாறாட்டம் செய்து அமைச்சர் பதவியை இழந்தார். கடந்த 2016 தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. தற்போது நடந்த தேர்தலின்போது பாஜகவில் சேர்ந்து வென்று எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில், கருவடிக்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவிலுள்ள பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் வீட்டின் முன்பு சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த எல்லம்மாள் தனது குழந்தைகளுடன் வந்து இன்று தர்ணாவில் ஈடுபட்டார்.
அதுபற்றி எல்லம்மாள் கூறியதாவது: ''புதுச்சேரியில் தற்போது எம்எல்ஏவாக இருக்கும் கல்யாணசுந்தரமும் நானும் நான்கு ஆண்டுகளாக காதலித்தோம். அப்போது அவர் அரசியலில் இல்லை. கடந்த 17.3.2008-ல் சென்னை வடபழனி கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். அதன்பிறகுதான் எம்எல்ஏவானார். எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தபோது தாய் வீட்டில் இருந்தபோது கல்யாணசுந்தரம் எனக்கு தெரியாமல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு பிறகுதான் அவ்விஷயம் தெரிந்தது. பிறகு தவறு செய்துவிட்டதாகத் தெரிவித்தார். பிறகு இணைந்து புதுச்சேரியில் வாழ்ந்து வந்தோம். தற்போது இரு குழந்தைகள் உள்ளனர். பின்னர் சென்னைக்கு சென்றுவிட்டோம்.
தற்போது இரண்டாவது மனைவியின் பேச்சைக் கேட்டு தற்போது எனது வீட்டுக்கு வருவதில்லை. எனது குழந்தைகளையும் சரியாக கவனிப்பதில்லை. கடந்த 2018-ல் புதுச்சேரி வந்தபோது கல்யாணசுந்தரத்தின் இரண்டாவது மனைவியால் எனக்கு பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் தரப்பில் மிரட்டல் வந்ததால், அதையடுத்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திடமும் புகார் தந்தேன். சில மாதங்களாக எனக்கும், குடும்பத்துக்கு மாதந்தோறும் தந்த ரூ.25 ஆயிரம் உதவித்தொகையை எனது கணவர் மூன்று மாதங்களாக நிறுத்தி விட்டார். தற்போது முழுவதுமாக எனது குழந்தைகளுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார். அதனால் அவரை சந்தித்து முறையிடவே இங்கு வந்தேன். ஆனால் அவர் இங்கு இல்லை என்று தெரிவித்ததால் குழந்தைகளுடன் காத்துள்ளோம்'' என்றார்.
அதையடுத்து லாஸ்பேட்டை போலீஸில் புகார் அளிக்க சென்றனர். ஆனால், அவர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சொன்னார்கள். அதையடுத்து எல்லம்மாள் மகளிர் காவல் நிலையத்துக்கு சென்றபோது, தங்கள் காவல் நிலையப் பகுதி வில்லியனூரில் வரும் என்று அனுப்பிவிட்டனர். எம்எல்ஏவுக்கு எதிராக புகார் தெரிவிக்க வந்ததால் போலீஸார் மனுவை வாங்காமல் அலைக்கழித்தனர். இதுபற்றி எம்எல்ஏ கல்யாணசுந்தரம் தரப்பில் கேட்டதற்கு, "கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரண்டு மாதங்களாக பணம் அனுப்பவில்லை. சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT