Published : 26 Apr 2023 03:51 PM
Last Updated : 26 Apr 2023 03:51 PM

“நாங்கள் எஜமானர்கள் அல்ல, மக்களின் கவுரவமான வேலைக்காரர்கள்” - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு

ராஜபாளையம்: ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக ரூ.40 கோடி மதிப்பில் 227 படுக்கைகள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர். விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், ''ராஜபாளையத்தில் புதிய மருத்துவமனை கட்டிடம் வரும்போது, அதற்குரிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வரப்போகிறது. மேலும் ராஜபாளையம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இரு புறமும் புறவழிச் சாலை அமைய உள்ளது. ரயில்வே மேம்பாலம் ஒரு மாதத்தில் திறக்கப்படும். ராஜபாளையத்தில் தனியாக வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைய உள்ளது. ராஜபாளையம் தாலுகா சிவகாசி கோட்டத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு சேவை செய்வதற்காக தான், எங்களை தேர்வு செய்து உள்ளீர்கள். நாங்கள் எஜமானர்கள் அல்ல, மக்களின் கவுரவமான வேலைக்காரர்கள்,'' என்றார்.

விழாவில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் முருகவேல், எம்.பி தனுஷ் குமார், எம்.எல்.ஏ தங்கபாண்டியன், நகராட்சித் தலைவர் பவித்ரா ஷியாம், ஒன்றிய தலைவர் சிங்கராஜ், மாவட்ட விளையாட்டு மேம்பட்டு பிரிவு அமைப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தென்காசி மருத்துவமனைக்கு திரும்ப பெறப்பட்ட ரூ.20 கோடி நிதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார துறை அமைச்சரிடம் எம்.பி கோரிக்கை விடுத்தார்.

விழாவில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ''அனைத்துத் துறைகளிலும் மாவட்டத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தொழிலாளர்களாக உள்ளனர். அதனால் தான் பிற இடங்களில் மாவட்டத்திற்கு ஒரு தலைமை மருத்துவமனை உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை தலைமை மருத்துவமனையாகவும், ராஜபாளையம் அதற்கு இணையான மருத்துவமனை ஆகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இந்தியாவிலேயே அதிக பயனாளிகளைக் கொண்டு தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் 2020-21-ம் ஆண்டில் 478 பேரும், 2021-22 ஆண்டில் 721 பேரும், 2022-23 ஆண்டில் 918 பேரும் சிகிச்சை பெற்று உள்ளனர்.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நம்மை காக்கும் 48 திட்டத்தில் தமிழகத்தில் 1.50 லட்சம் மக்கள் சிகிச்சை பெற்று உயிர் பெற்று உள்ளனர். இத்திட்டத்தில் கடந்த ஆண்டு ராஜபாளையம் மருத்துவமனையில் 177 பேர் சிகிச்சை பெற்று உயிர் பெற்று உள்ளனர். அனைத்து சுகாதார திட்டங்களிலும் ராஜபாளையம் அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் சுமார் 1 லட்சம் சதுர அடியில் அமைய உள்ள புதிய கட்டிடத்தில் 227 படுக்கைகளுடன் புதிய வளாகம் அமைகிறது. இந்த பணிகள் முடிந்த பின் ஏற்கெனவே உள்ள 212 படுக்கைகளுடன், புதிய 227 படுக்கை உடன் சேர்த்து 439 படுக்கை வசதிகளுடன் கூடிய பிரம்மாண்டமான அரசு மருத்துவமனையாக உருவாகும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x