Published : 26 Apr 2023 02:58 PM
Last Updated : 26 Apr 2023 02:58 PM
சென்னை: சூடானில் உள்நாட்டுப் போர் காரணமாக நிலவிவரும் சிக்கலான நிலை காரணமாக அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 400 பேர் உட்பட இந்திய குடிமக்களை அழைத்து வரும் "ஆபரேஷன் காவேரி" மீட்புப் பணிக்கு தமிழக அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிடத் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (26-4-2023) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், சூடானில் உள்நாட்டு போர் காரணமாக நிலவிய சிக்கலான நிலை தற்போது முன்னேற்றமடைந்து வரும் நிலையில், இந்திய குடிமக்கள் சூடானில் இருந்து விரைவாக வெளியேறுவதற்கு வசதியாக இந்திய விமானப்படை விமானம் மற்றும் இந்திய கடற்படை கப்பல்கள் சூடான் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது ஆறுதலளிப்பதாகத் தெரிவித்துள்ள முதல்வர், தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 400 பேர் வரை சூடானில் சிக்கித் தவித்து வருதாகவும் அவர்கள் இந்தியாவுக்குத் திரும்புவதற்கான உதவிகளை எதிர்பார்த்து இருப்பது குறித்து பிரதமரின் கவனத்திற்குத் தாம் கொண்டுவர விரும்புவதாகவும், சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் முதல் தொகுதி ஐஎன்எஸ் சுமேதா என்ற கப்பலில் இருக்கும் நிலையில் அவர்களின் உறவினர்களிடமிருந்து மாநில அரசுக்கு அவசர அழைப்புகள் வந்துகொண்டிருப்பதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைக் குறித்த தகவல்களைப் பெறுவதற்கும், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக வெளியேற்றுவதற்கும் அனைத்து உதவிகளையும் வழங்கவும், வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் சூடானில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து செயல்படவும் தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாகவும் முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
"ஆபரேஷன் காவேரி" மீட்புப் பணியானது, சூடானில் சிக்கித் தவிக்கும் தங்கள் உற்றார் உறவினர்களின் பாதுகாப்பாகத் திரும்புவதற்காகக் காத்திருக்கும் அனைத்து இந்தியர்களின் குடும்பங்களுக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரும் எனத் தாம் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், சூடானிலிருந்து இந்திய குடிமக்களை வெளியேற்றும் முயற்சிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஒத்துழைப்பு வழங்கத் தயார் நிலையில் இருப்பதாக மீண்டும் தமது கடிதத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT