Published : 26 Apr 2023 01:03 PM
Last Updated : 26 Apr 2023 01:03 PM
சென்னை: கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்கு, குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்க நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்," முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு 3.6.2021 அன்று வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என்று முதல்வர் அறிவித்தார்.
அதன்படி, இம்மருத்துவமனைக் கட்டடம் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் இருதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, இரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைத் துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை போன்ற உயர்சிறப்பு பிரிவுகளை கொண்டுள்ளது.
இம்மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு (27.4.2023) சென்னையிலிருந்து புதுதில்லி புறப்பட்டுச் சென்று, நாளை மறுநாள் (28.4.2023) குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்திட அழைப்பு விடுக்கிறார்.
அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இப்பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT