Published : 26 Apr 2023 05:40 AM
Last Updated : 26 Apr 2023 05:40 AM

12 மணி நேர வேலை மசோதாவை ரத்து செய்ய வேண்டும் - அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் 12 மணி நேர வேலை தொடர்பான தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: அனைத்து கட்சிகள்,தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, ஜனநாயக பண்போடு, 12 மணி நேர வேலை மசோதாவை நிறுத்திவைத்த முதல்வருக்கு பாராட்டுகள், நன்றி. மசோதா முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் முதல்வர் நிறைவேற்ற வேண்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: எதிர்ப்பின் காரணமாக, வேலை நேர மசோதா மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். தொழிலாளர் நலனில் அக்கறை உள்ளதுபோல அறிக்கை வெளியிடும் முதல்வர், மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பு ஆலோசிக்காதது ஏன்? மசோதாவை நிறைவேற்றி, எதிர்ப்பு எழுந்த பிறகு நிறுத்திவைப்பது வேடிக்கையாக உள்ளது. திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதி என்ற அறிவிப்புக்கு, அமைச்சர்கள் மறுப்பு தெரிவிப்பது என மாறி மாறி வெளியிடப்படும் அறிவிப்புகளால் மக்கள் குழப்பம் அடைகின்றனர். அனைவரது ஆலோசனைக்கு பிறகே புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுகிறது எனும்,முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன். யார் சொல்கிறார்கள் என்பதைவிட என்ன சொல்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் தந்துமாற்றுத் தரப்பின் நியாயமான கருத்துகளுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயல்படுவது ஓர் ஆரோக்கியமான அரசின் அடையாளம். முதல்வரை பாராட்டுகிறேன். 12 மணி நேர வேலை எனும்அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மே 12-ல் நடக்க இருந்த போராட்டங்கள் நிறுத்தம்: சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், ஐஎன்டியுசி உட்பட 9 சங்கங்களை உள்ளடக்கிய அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 12 மணி வேலை நேரத்துக்கு வகை செய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியதால், மே 12-ம் தேதி வேலைநிறுத்தம் செய்வதென்று அறிவித்திருந்தோம். இந்த நிலையில், இந்த சட்டத் திருத்தத்தை செயல்படாமல் நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

தொழிற்சங் கங்களின் உணர்வை புரிந்து, உரிய மதிப்பளித்து, தொழில் அமைதிக்கு வழிவகுக்கும் முறையில் முதல்வர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டதை பாராட்டி வரவேற்கிறோம். அரசு நடைமுறைக்கு பொருத்தமான வகையில் விரைவாக சட்டத் திருத்தத்தை கைவிட்டு முற்றாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். எனவே, வேலைநிறுத்தம் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களையும் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x