Published : 26 Apr 2023 06:03 AM
Last Updated : 26 Apr 2023 06:03 AM

பழனிசாமி ஆட்சியில் டெண்டர்களில் முறைகேடு - சிஏஜி அறிக்கையில் அம்பலமாகியுள்ளதாக அமைச்சர் தகவல்

சென்னை: பழனிசாமி ஆட்சியில் டெண்டர்களில் முறைகேடு நடந்துள்ளதை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இறுதி நாளில் மத்திய கணக்கு தணிக்கை துறை தலைவர் (சிஏஜி) அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், தமிழகத்தில் 2016 முதல் 2021 வரை பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் நிர்வாகச் சீர்கேடுகளும், முறைகேடுகளும் நடந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பழனிசாமி தனது சம்பந்தி மற்றும் குடும்பத்தினருக்கு டெண்டர்களை ஒதுக்கவே பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையை தன் வசம் வைத்திருந்தார்.

முறைகேட்டின் உச்சமாக அரசு அதிகாரிகளின் கணினிகளைப் பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்த புள்ளிகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2019 முதல் 2021-ம் ஆண்டு வரை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் 57 கணினிகளை பயன்படுத்தி 87 ஒப்பந்தக்காரர்கள் டெண்டர் தாக்கல் செய்துள்ளனர். இந்த காலகட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2,091 டெண்டர்கள் ஒரே கணினியை பயன்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள் ளது.

நெடுஞ்சாலைத்துறையில் 2019 முதல் 2021-ம் ஆண்டு வரை கோரப்பட்ட 9,007 ஒப்பந்தப் புள்ளிகளில் மற்ற எந்த ஒப்பந்தக்காரர்களையும், இந்த ஒப்பந்தத்தில் சேர்க்காமல் தங்களுக்கு வேண்டிய ஒரே குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஒரே ஐபி முகவரியில் இருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரே ஐபி முகவரியில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட 490 டெண்டர்கள் ஏற்கப்பட்டு பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இது அப்பட்டமான விதிமீறல்.

முறைகேடுகள், நிதி இழப்புகள்: பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்துக்கு அதிமுக ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் விளம்பரங்கள் வெளியிட்டதில் ரூ.2.18 கோடி முறைகேடு நடந்துள்ளது. 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை திட்டத்தின் கீழ் 5.01 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், 2.80 லட்சம் வீடுகள்தான் கட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை அதிமுக அரசு முறையாக கையாளவில்லை. தகுதியற்ற 3,354 பேருக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை அடையாளம் காண்பதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. இதன்மூலம் சமூகநீதியை சிதைத்துள்ளது.

காவல்துறை நவீனமாக்கல் திட்டத்தில் ரூ.88.46 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் ஒரே ஒருவர் மட்டும் பங்கேற்றார். இத்திட்டத்தில் ரூ.14.37 கோடி வீணாக்கப்பட்டுள்ளது. திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.74.03 கோடியை பயன்படுத்தவில்லை. இலவச லேப் டாப் திட்டத்தில் ரூ.68.71 கோடி இழப்பு, காலணி வழங்கும் திட்டத்தில் ரூ.5.4 கோடி வீணாக்கப்பட்டுள்ளது. புத்தகப்பை வழங்கும் திட்டத்தில் ரூ.7.28 கோடி முடக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறையை மிகவும் அலட்சியமாக கையாண்டுள்ளனர். 2018, 19-ம் ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கிய நிதியில் ரூ.1,627 கோடி செலவு செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, தமிழக அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x