Published : 26 Apr 2023 06:12 AM
Last Updated : 26 Apr 2023 06:12 AM

மாநகராட்சிகளில் 80 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை இருந்தால் கவுன்சிலர் எண்ணிக்கை 230 ஆக உயர்த்தலாம்

சென்னை: மாநகராட்சிகளில் மக்கள் தொகை 80 லட்சத்துக்கும் மேல் இருந்தால் கவுன்சிலர்கள் எண்ணிக்கையை 230 ஆக உயர்த்தலாம், உள்ளாட்சி அமைப்புகளை மக்கள் தொகை அடிப்படையில் வகைப்படுத்துவது உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை தற்போது, 21 மாநகராட்சிகள், 139 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இந்நிலையில் சட்டப்பேரவையில், கேள்வி நேரத்திலும், விவாதத்தின்போதும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் வார்டுகள் எண்ணிக்கை உயர்த்துதல், வார்டுகள் மறுவரையறை, இணைக்கப்பட்ட பகுதிகளுக்கான வார்டு வரையறை குறித்து பல்வேறு எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வார்டு மறுவரையறை செய்யப்பட்டபோது, தேர்தல் நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டதால், வரையறை செய்யப்படவில்லை என்றும் இதற்கான குழு அமைத்து புதிய விதிகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான புதிய விதிகளை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த விதிகள்படி, மாநகராட்சிகள் மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மாநகராட்சிகளில் 10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை இருந்தால் சிறப்பு நிலை மாநகராட்சியாகவும், 5 முதல் 10 லட்சம் மக்கள் தொகை இருந்தால் தேர்வு நிலை மாநகராட்சியாகவும், 3 முதல் 5 லட்சம் மக்கள் தொகை இருந்தால் முதல் நிலை மாநகராட்சியாகவும், 3 லட்சம் மக்கள் தொகை வரை உள்ளவை 2- ம் நிலை மாநகராட்சியாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நகராட்சிகளை பொருத்தவரை, வருவாய் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அன்படி, ரூ.15 கோடிக்கும் மேல் வருவாய் இருந்தால் சிறப்பு நிலை, ரூ.9 கோடி - 15 கோடி இருந்தால் தேர்வுநிலை, ரூ.6 கோடி -9 கோடி வரை முதல் நிலை, ரூ.6 கோடிக்கு கீழ் இருந்தால் இரண்டாம் நிலை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், ரூ.2 கோடிக்கு மேல் உள்ள பேரூராட்சிகள் சிறப்பு நிலையாகவும், ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடிவரை வருவாய் இருந்தால் தேர்வு நிலையாகவும், ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருந்தால் முதல் நிலையாகவும், ரூ.50 லட்சம் வரை வருவாய் இருந்தால் இரண்டாம் நிலை பேரூராட்சியாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக, மக்கள் தொகை அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் கவுன்சிலர்கள் எண்ணிக்கை வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சிகளில் 80 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் தொகை இருந்தால் 230 கவுன்சிலர்கள் வரை இருக்கலாம். 60 முதல் 80 லட்சம் வரை இருந்தால் 200, 50 முதல் 60 லட்சம் வரை இருந்தால் 180 கவுன்சிலர்கள் வரை என குறைந்தபட்சம் 3 லட்சம் இருந்தால் 48 கவுன்சிலர்கள் நியமிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல், நகராட்சிகளில் 2.25 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை இருந்தால் 52 கவுன்சிலர்கள், 2 முதல் 2.25 லட்சம் வரை 51, 1.75 முதல் 2 லட்சம் வரை 48 கவுன்சிலர்கள், குறைந்தபட்சம் 30 ஆயிரம் மக்கள் தொகை இருந்தால் 22 கவுன்சிலர்கள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பேரூராட்சிகளில், 25 ஆயிரத்துக்கு அதிகம் இருந்தால் 21, 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை 18, 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை 15, 10ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை 12 பேரும் கவுன்சிலர்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை இந்த கவுன்சிலர்கள் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்யக்கூடாது என்றும், ஒருவேளை நகராட்சி எல்லைகளில் திருத்தம் செய்யப்பட்டால் கவுன்சிலர்கள் எண்ணிக்கையில் மாற்றம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டுக்கான விதிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வார்டுகள் வரையறை செய்தல், நகராட்சிகளில் இட ஒதுக்கீடு, நகராட்சி தலைவருக்கான இட ஒதுக்கீடு, ஒரே நேரத்தில் பல தேர்தல்களை நடத்துதல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர், வார்டு குழுக்கள், நிலைக்குழுக்கள் உள்ளிட்டவற்றுக்கான விதிகள் என அனைத்து வகையான விதிகளும், நகர்ப்புற உள்ளாட்சிகளின் பணிகள், அவற்றுக்கான விதிகள் இந்த அறிவிக்கையில் அடங்கியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x