Last Updated : 11 Sep, 2017 11:33 AM

 

Published : 11 Sep 2017 11:33 AM
Last Updated : 11 Sep 2017 11:33 AM

கபடி போட்டி களமாக மாற்றப்பட்ட மதுரை வைகை ஆறு: ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

மதுரை வைகை ஆற்றுக்குள் தனியார் அமைப்பு ஒன்றின் சார்பில் திடல் அமைத்து கபடி போட்டி நடத்தப்படுவதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை எதிர்காலத்தில் அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மதுரை நகருக்கு பெருமை சேர்க்கும் வைகை நதி, நாளுக்கு நாள் சிதைந்து வருகிறது. ஆற்றில் நீரோட்டம் இல்லாத நிலையில், பல வகைகளில் ஆக்கிரமிப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆற்றில் குப்பைகளை கொட்டுவது, கழிவுநீரை கலந்துவிடுவது, கட்டிட இடிபாடுகளை கொட்டுவது, ஆற்றின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து தோட்டம் அமைப்பது, தண்ணீர் தொட்டி அமைத்து கட்டணம் வசூலிப்பது போன்ற பல்வேறு செயல்களால் ஆற்றின் தூய்மையும், சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது.

வைகை நதியை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த கே.கே ரமேஷ் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் மதுரை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அளித்த பதில் மனுவில், வைகை ஆற்றில் 54 இடங்களில் கழிவுகள் கலக்கப்படுகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ஆற்றில் கழிவுநீரை கலந்துவிடும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

ஆற்றில் கபடி போட்டி

நீர்நிலைகளை பாதுகாக்க நீதிமன்றங்கள் அதிக கவனம் செலுத்திவரும் நிலையில், புதிது புதிதாக ஆற்றை சிதைக்கும் செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வைகை ஆற்றை தற்காலிக பார்க்கிங் பகுதியாக மாற்றி கார், மோட்டார் சைக்கிள்களை சிலர் நிறுத்தியிருந்தனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், மதுரை செல்லூர் அருகே வைகை ஆற்றுக்குள் தனியார் அமைப்பு சார்பில் தற்போது கபடி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக ஆற்றில் தற்காலிக திடல் அமைக்கப்பட்டுள்ளது. இரவில் விளையாடுவதற்காக மின்விளக்கு வசதியையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இது போன்று ஆற்றுக்குள் போட்டி நடத்த அனுமதித்திருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை உதாரணமாகக் கொண்டு எதிர்காலத்தில் மேலும் சிலர் பொதுநிகழ்ச்சிகளை ஆற்றுப் பகுதியில் நடத்த வாய்ப்புள்ளது. பின்னர், அதுவே நிரந்தரமாகி ஆக்கிரமிப்புக்கு வழிவகுத்துவிடும்.

தடுக்க நடவடிக்கை

இது குறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறியதாவது: வைகை ஆற்றுப் பகுதியில் கபடி போட்டி நடத்தக் கூடாது என ஆட்சியரிடமும், போலீஸாரிடமும் புகார் கொடுத்தோம். அதையும் மீறி தற்போது கபடி போட்டி நடத்தப்படுகிறது. இது குறித்து கேட்டால், நீதிமன்ற அனுமதியோடு போட்டியை நடத்திவருவதாக கூறுகின்றனர். அது உண்மையா என தெரியவில்லை. இந்த போட்டிக்கு போலீஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மதுரையை சேர்ந்த அமைச்சர் ஒருவரின் செல்வாக்கால் இந்த போட்டி நடப்பதாக தெரியவந்துள்ளது.

இதைப் பார்க்கும் மேலும் பலர், வைகை ஆற்றுக்குள் தனிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த வாய்ப்புள்ளது. எனவே, வைகையை ஆக்கிரமித்து தனியார் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதைத் தடுக்க 8 அமைப்புகள் இணைந்து செயல்பட உள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x