Published : 17 Sep 2017 01:19 PM
Last Updated : 17 Sep 2017 01:19 PM
செல்போனில் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு கால்தவறி கடலில் விழுந்து மாணவர் இறந்த சம்பவம் பிரபல சுற்றுலா தலமான ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் நடந்துள்ளது.
ராமேசுவரம் தீவுப்பகுதியான தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை ஆகிய கடற்பகுதிகளில் எப்போதும் கடல் சீற்றத்துடன் காணப்படும். இதனால் இப்பகுதிகளில் கடலில் குறிக்க சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.
ஆனால் ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் கடலை பார்த்த மகிழ்ச்சியிலும், ஆர்வத்திலும் கடலில் இறங்கி குளிப்பது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. மேலும் முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி இறங்கு தளத்திற்கு சுற்றுலாப் பயணிகள் சீறி எழும் கடல் அலைக்கு அருகே செல்ஃபி எடுக்க அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.
வெள்ளிக்கிழமை கீழக்கரையில் ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விளாத்திகுளம் மாணவர் அஜித்குமார் (19), சக மாணவர்களான சிறை மீட்டான், தினேஷ், கணேஷ் பாண்டியன், ஜெயம் பாண்டியன், மார்டின், ஜெயசூர்யா, அஜித், மதிவாணன், மணிகண்டன் உள்ளிட்ட 11 பேருடன் தனுஷ்கோடிக்கு சுற்றுலா வந்தனர். வெள்ளிக்கிழமை மதியம் முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி இறங்கு தளத்தில் நின்று மாணவர்கள் செல்ஃபி எடுத்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மீன் பிடி இறங்கு தளத்தின் மீது மோதி எழுந்த ராட்சத கடல் அலை செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த மாணவர் அஜித்குமாரை இழுத்துச் சென்றது. உடனே அவரை காப்பாற்ற சக மாணவர்களில் மூவர் கடலில் குதித்தனர். அஜித்குமாரை மீட்க போராடிய அவர்கள் முடியாததால் 3 பேரும் நீந்திக் கரைக்கு வந்துவிட்டனர். மாயமான மாணவர் அஜித் குமாரை படகுகளில் மீனவர்கள் உதவியுடன் கடலோர காவல் போலீஸாரும், தீயணைப்புத் துறை வீரர்களும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
சனிக்கிழமை மதியம் முகுந்தராயர் சத்திரம் கடற்பகுதியில் அஜித் குமாரின் உடல் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு, கடலோர காவல் போலீஸார் மீட்பு பிரேத பரிசோதனைக்காக ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தனுஷ்கோடிக்கு தற்போது புதிய தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டுள்ளதால் சராசரியாக நாளொன்றுக்கு ஐந்து ஆயிரம் பேர் வரையிலும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க நிரந்தர தடை விதிப்பதுடன், அறிவிப்புப் பலகைகளை அதிகப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, காவல்துறையினரும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும், என இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக 'தி இந்து' தமிழ் நாளிதழில் தனுஷ்கோடி கடற்பகுதியில் குளிக்க நிரந்தர தடை விதிக்க வலியுறுத்தியும், தனுஷ்கோடி கடற்பகுதியில் செல்ஃபி மோகத்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT