Published : 25 Apr 2023 11:46 PM
Last Updated : 25 Apr 2023 11:46 PM

'தமிழகத்தில் பொதுமக்கள், அதிகாரிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல்' - விஏஓ கொலை குறித்து அண்ணாமலை

சென்னை: தமிழகத்தில் பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எந்தப் பாதுகாப்புமில்லாத சூழலே நிலவுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் (53). முறப்பநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை தடுப்பதில் தீவிரமாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கலியாவூரை சேர்ந்த ராமசுப்பு மற்றும் சிலர் தாமிரபரணி ஆற்றில் மணல் திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு காவல் நிலையத்தில் கடந்த 13-ம் தேதி எழுத்துபூர்வமாக ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகார் மீது காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ராமசுப்பு மற்றும் அவரது உறவினரான மாரிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்குள் புகுந்து லூர்து பிரான்சிஸை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் சகோதரர் லூர்து பிரான்ஸிஸ் அலுவலகத்திலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீரழிந்து இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. கடந்த 13 ஆம் தேதி, தூத்துக்குடி முறப்பநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் மணல் கடத்தப்படுவதாக, ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட சில நபர்கள் மீது, முறப்பநாடு காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்திருக்கிறார்.

அந்த நபர் மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருந்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், தன் பணியைச் சரியாகச் செய்த அரசு அதிகாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எந்தப் பாதுகாப்புமில்லாத சூழலே நிலவுகிறது. சமூக விரோதிகள் மேல் நடவடிக்கை எடுக்காமல், குற்றச் சம்பவங்களைப் பூசி மெழுகப் பார்க்கும் கையாலாகாத திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். இன்னும் எத்தனை உயிர்ப் பலிகள் வேண்டும் இந்த திறனற்ற திமுக அரசு தூக்கத்திலிருந்து கண் விழிக்க?" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x