Published : 25 Apr 2023 09:10 PM
Last Updated : 25 Apr 2023 09:10 PM
புதுடெல்லி: வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் காலத்தைச் சேர்ந்த ஹனுமன் சிலை மீட்கப்பட்டு, அது தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரியலூர் மாவட்டம் பொட்டவெளி வெள்ளூர் ஸ்ரீவரதராஜ பெருமாள் விஷ்ணு ஆலயத்திலிருந்து பகவான் ஹனுமன் சிலை கடத்தப்பட்டது. அந்த சிலை 14-15-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சோழர் காலத்தைச் சேர்ந்த சிலையாகும். இது 1961-ம் ஆண்டு புதுச்சேரி பிரான்ஸ் நிறுவனத்தின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டது.
2012-ம் ஆண்டு கடத்தப்பட்ட இந்த சிலை, ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டு கேன்பராவில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் 2023 பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரத்தில் அந்த சிலை இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு, அது 18.04.2023 அன்று வழக்கு சொத்தாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
மத்திய அரசு நாட்டின் பழங்கால பாரம்பரியத்தை பாதுகாக்கவும், கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பாரம்பரிய சின்னங்களை மீட்கவும் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது வரை மொத்தம் 251 பழங்கால பாரம்பரிய சின்னங்கள் மற்றும் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 2014-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது வரை 238 சிலைகளும், பாரம்பரிய சின்னனங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT