Published : 25 Apr 2023 07:04 PM
Last Updated : 25 Apr 2023 07:04 PM
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க கோரி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை (ஏப்.25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான், அலகாபாத், மத்தியப் பிரதேசம், பாட்னா நீதிமன்றங்களில் அந்தந்த மாநிலங்களில் பேசுகின்ற இந்தியை வழக்காடு மொழியாக அறிவித்துள்ள நிலையில், இந்தி பேசாத பிற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளை அலுவல் மொழியாக்க வேண்டும் என அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி உயர் நீதிமன்ற ஆவின் நுழைவு வாயில் அருகே அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் பொது செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வழக்கறிஞர்கள், மக்களின் மொழியில் நீதி பரிபாலனம் வழங்கும்போது சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயகமும் காக்கப்படும் என வலியுறுத்தினர்.
சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு பல நூறு கோடிகள் ஒதுக்கும் மத்திய அரசு, அந்தந்த மாநில மொழிகளில் நீதிமன்றங்கள் செயல்பட நிதி ஒதுக்கவில்லை என கண்டனம் தெரிவித்தனர். தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி கோஷங்களை எழுப்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT