Published : 25 Apr 2023 06:54 PM
Last Updated : 25 Apr 2023 06:54 PM

தூத்துக்குடியில் விஏஓ வெட்டிக் கொலை | “அரசு அலுவலருக்கே இந்த நிலை என்றால்...” - இபிஎஸ் கண்டனம்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்

சென்னை: "ஓர் அரசு அலுவலருக்கே இத்தகைய நிலையென்றால் பாமர மக்களுக்கு இந்த ஆட்சியில் எங்கே இருக்கிறது பாதுகாப்பு? நாடக அரசியலை மட்டுமே கவனம் செலுத்தும் இந்த அரசின் முதல்வர் இனியாவது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தூத்துக்குடி விஏஓ படுகொலை சம்பவத்துக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து பகுதியில் அலுவலகம் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது, அவரது குடும்பத்திற்கு எனக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

இது போன்ற தொடர் வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதை சுட்டிக்காட்டி இவ்வரசை சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளேன், அதற்கு இவ்வரசு பாராமுகமாய் இருப்பது மட்டுமில்லாமல் மக்கள் மீதும் அரசு அதிகாரிகளின் மீதும் எந்த அக்கறையும் இன்றி இருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.

ஒரு அரசு அலுவலருக்கே இத்தகைய நிலையென்றால் பாமர மக்களுக்கு இந்த ஆட்சியில் எங்கே இருக்கிறது பாதுகாப்பு? நாடக அரசியலை மட்டுமே கவனம் செலுத்தும் இந்த அரசின் முதல்வர் இனியாவது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென திட்டவட்டமாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசை பாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (53). இவர் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இன்று மதியம் 12.30 மணியளவில் தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது அலுவலகத்துக்குள் வந்த 2 நபர்கள், திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து லூர்து பிரான்சிஸை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில், லூர்து பிரான்சிஸ் உயிரிழந்தார். | வாசிக்க > மணல் கடத்தலைத் தடுக்க தீவிரம் காட்டிய கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொலை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x