Published : 25 Apr 2023 06:20 PM
Last Updated : 25 Apr 2023 06:20 PM

குட்கா முறைகேடு வழக்கு: குடோனுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரிய வழக்கு தள்ளுபடி

கோப்புப்படம்

சென்னை: குட்கா முறைகேடு புகாரில் சம்மந்தப்பட்ட குடோனுக்கு வைக்கப்பட சீலை அகற்ற கோரிய உரிமையாளரின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு வருமானவரித் துறையினர் சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள குடோனில் திடீர் சோதனை நடத்தியபோது தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான டைரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சர்ச்சையில் தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித் துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், மத்திய அரசு அதிகாரிகள் பழனி, செந்தில்வேலவன் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்டன.

இந்நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. அதன்படி வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேரையும் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்தனர்.

இந்த வழக்கில் டெல்லி சிபிஐ அதிகாரிகள், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மாதவராவ் உள்ளி்ட்ட 6 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கையை கடந்த 2021-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கி்ல் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கடந்த 2022, ஜூலை 19-ம் தேதி தமிழக அரசு அனுமதி வழங்கியது.

அதையடுத்து இந்த 11 பேருக்கும் எதிராக டெல்லி சிபிஐ போலீஸார் கூடுதல் குற்றப்பத்திரிகையை கடந்தாண்டு நவம்பரில் தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, தவறுகளைத் திருத்தி முழுமையான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் பிழை திருத்தம் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை என்றும், குட்கா முறைகேடு விசாரணை மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் தொடர்பான மத்திய அரசின் கடிதம் இன்னும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், குட்கா பொருள்கள் வைத்திருந்தாக தன்னுடைய குடோன் சீல் வைக்கபட்டுள்ளது. வாடகைக்குவிட்ட குடோன் சீல் வைக்கபட்டுள்ளாதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் தன்னுடைய குடோனுக்கு வைத்த சீலை அகற்ற சிபிஐக்கு உத்தரவிடக் கோரி அதன் உரிமையாளர் சுமந்த் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மலர் வாலண்டினா முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், பிழைகள் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை என்று தெரிவிக்கபட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, குடோனுக்கு வைத்த சீலை அகற்ற சிபிஐக்கு உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி செய்து, விசாரணை மே 11ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x