Published : 25 Apr 2023 06:08 PM
Last Updated : 25 Apr 2023 06:08 PM
சென்னை: பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கழிப்பறைகள் கட்ட மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தற்போது 954 பொதுக் கழிப்பறைகள் உள்ளன. இந்தக் கழிப்பறைகள் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய கழிப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் 492 இடங்களில் புதிய கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 366 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், 100 கழிப்பறைகளை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 26 கழிப்பறைகளை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 2023-24ம் ஆண்டில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 352 இடங்களில் 1,046 இருக்கைகளுடன்‘ கூடிய 215 புதிய கழிப்பறைகளும், 265 புதிய சிறுநீர் கழிப்பறைகளும் புதிதாக கட்டப்படவுள்ளது.
மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கழிப்பறைகள் கட்ட மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு கழிப்பறைகள் கட்ட மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT