Published : 25 Apr 2023 03:36 PM
Last Updated : 25 Apr 2023 03:36 PM
சென்னை: மாநகராட்சிகளில் 80 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை இருந்தால் 230 கவுன்சிலர்கள் இருக்கலாம் என்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 20-க்கு மேற்பட்ட மாநகராட்சிகள், 100-க்கு மேற்பட்ட நகராட்சிகள் மற்றும் 400-க்கு மேற்பட்ட பேரூராட்சிகள் உள்ளன. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023 (THE TAMIL NADU URBAN LOCAL BODIES RULES, 2023 ) என்ற பெயரில் புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராடசிகள் 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சிகளில் 10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை உள்ளவை சிறப்பு நிலை மாநகராட்சியாகவும், 5 முதல் 10 லட்சம் வரை உள்ளவை தேர்வு நிலை மாநகராட்சியாகவும், 3 முதல் 5 லட்சம் வரை உள்ளவை முதல் நிலை மாநகராட்சியாகவும், 3 லட்சம் மக்கள் தொகை வரை உள்ளவை 2-வது நிலை மாநகராட்சியாகவும் வகைபடுத்தப்பட்டுள்ளன.
நகராட்சிகளில் 15 கோடிக்கு மேல் வருமானம் உள்ள நகராட்சிகள் சிறப்பு நிலை நகராட்சிகளாகவும், 9 கோடி முதல் 15 கோடி வரை வருவாய் உள்ள நகராட்சிகள் தேர்வு நிலை நகராட்சியாகவும், 9 முதல் 6 கோடி வரை வருவாய் உள்ள நகராட்சிகள் முதல் நிலை நகராட்சியாகவும், 6 கோடிக்கு கீழ் வருவாய் உள்ள நகராட்சிகள் 2-வது நிலை நகராட்சியாகவும் வகைபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், மக்கள் தொகை அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்வு செய்யவேண்டிய கவுன்சிலர்களின் எண்ணிக்கையும் இந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது. இதன்படி 80 லட்சத்துக்கு அதிகமாக மக்கள் தொகை உள்ள மாநகராட்சியில் 230 கவுன்சிலர்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 60 முதல் 80 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள மாநகராட்சிகளில் 200 கவுன்சிலர்கள் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சிகளில் 2.25 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை உள்ள நகராட்சிகளில் 52 கவுன்சிலர்களும், 30 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள நகராட்சிகளில் 22 கவுன்சிலர்களும் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 25 ஆயிரத்துக்கு மேல் மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் 21 கவுன்சிலர்களும், 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் 12 கவுன்சிலர்கள் வரை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT