Published : 25 Apr 2023 01:16 PM
Last Updated : 25 Apr 2023 01:16 PM
சென்னை: அவ்வை சண்முகம் சாலையின் ஒரு பகுதிக்கு “வி.பி. இராமன் சாலை” எனப் புதிய பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.பி. இராமன் வசிந்து வந்த லாயிட்ஸ் கார்னர் எனப் பெயரிடப்பட்ட வீடு அமைந்துள்ள சாலைக்கு “வி.பி. இராமன் சாலை” எனப் புதிய பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மறைந்த வி.பி. இராமன் அவர்கள், முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் மத்திய அரசின் சட்ட அலுவலராக நியமிக்கப்பட்ட முதல் தென்னிந்தியராகவும், பின்னர் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாகவும், அவர் இறக்கும் நாள் வரை இந்திய வழக்கறிஞர் கழகத்தின் முன்னணி உறுப்பினராகவும் இருந்தார். சட்டக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். பேரறிஞர் அண்ணாவின் கொள்கையில் பெரிதும் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டார்.
பேரறிஞர் அண்ணாவின் ஆங்கில இதழான ஹோம் லேண்ட் இதழின் துணை ஆசிரியர் என்று பல பொறுப்புகளை வகித்தார். கருணாநிதி மற்றும் சமகாலத்து தலைவர்களின் பேரன்பையும் நன்மதிப்பையும் பெற்றவராகவும் திகழ்ந்தார். கல்வி மட்டுமின்றி, கர்நாடக இசை, ஆங்கில இலக்கியம், கிரிக்கெட் என்று பன்முகத்திறன் கொண்டவராகவும் விளங்கினார்.
வி.பி. இராமனுக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில், மெரினா கடற்கரை காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்லக்கூடிய அவ்வை சண்முகம் சாலை எனப் பெயரிடப்பட்டுள்ள சாலைப்பகுதியினை “வி.பி. இராமன் சாலை” என தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வி.பி. இராமன் வாழ்ந்த லாயிட்ஸ் கார்னர் இல்லமும் இப்பகுதியிலே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT