Published : 25 Apr 2023 05:50 AM
Last Updated : 25 Apr 2023 05:50 AM
சென்னை: தொழிலாளர்களுக்கான 12 மணி நேர வேலை தொடர்பான மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 12-ம் தேதி தொழிற்சாலைகள் தொடர்பான சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 12 மணி நேர வேலையை அனுமதிக்கும் அந்த மசோதாவுக்கு திமுக, அதிமுக தவிர்த்து, அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும், மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இது தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து, மசோதாவைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினர். இதையடுத்து, மசோதாவை நிறுத்தி வைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த மசோதா தொடர்பாக அரசுத் தரப்பில் நேற்று தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்ததையில் அரசுத் தரப்பில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, செயலர்கள் முகமது நசிமுதீன் (தொழிலாளர் நலன்), ச.கிருஷ்ணன் (தொழில் துறை), தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல, தொழிற்சங்கங்கள் சார்பில், சண்முகம், நடராஜன் (தொமுச), கமலக்கண்ணன், தாடி மா.ராசு (அண்ணா தொழிற்சங்கம்), சவுந்திரராஜன் (சிஐடியு) மற்றும் தொழிலாளர் விடுதலை முன்னணி, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, பாட்டாளி தொழிலாளர் பேரவை, ஆம் ஆத்மி மக்கள் தேசியக் கட்சி, ஹிந்த் மஸ்தூர் சபா, தமிழ்நாடு வீட்டுவேலை சங்கம் உள்ளிட்ட 20 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில், அமைச்சர்களிடம் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்த தொழிற்சங்கத்தினர், தங்கள் தரப்பு கருத்துகளைத் தெரிவித்தனர். இவற்றை முதல்வரிடம் தெரிவிப்பதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர். கூட்டத்துக்குப் பின்னர் தொழிற்சங்கத்தினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கமலக்கண்ணன் (அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்): 12 மணி நேர வேலை மசோதாதொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். எனவே, இதைதிரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தினோம். மசோதாவை முழுமையாக திரும்பப்பெறாவிட்டால், மாபெரும் போராட்டங்களை முன்னெடுப்போம்.
சவுந்திரராஜன் (சிஐடியு): மசோதாவை திரும்பப் பெறுமாறு அனைத்து தொழிற்சங்கங்களும் வலியுறுத்தியுள்ளன. புதிய சட்டம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக இருக்காது. தற்போதுள்ள சட்டத்திலேயே, சில குறிப்பிட்ட நேர்வுகளில் விதிவிலக்கு தர முடியும். அரசிடமிருந்து எந்த விளக்கமும் பெற வேண்டிய அவசியம் தொழிற்சங்கங்களுக்கு இல்லை. இதில் முதல்வர் நல்ல முடிவெடுப்பார் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.
ராம.முத்துக்குமார் (பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை): மே தின நூற்றாண்டு வரும் சூழலில், வரும் மே 1-ம் தேதிக்குள் தொழிலாளர்களுக்கு எதிரான இந்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும். ஏற்கெனவே இந்த சட்டத்தை எதிர்த்த தமிழக முதல்வர், தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர் மத்திய அரசுக்கு ஆதரவாக இந்த சட்டத்தை நிறைவேற்றியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை முழுமையாக வாபஸ் பெறாவிட்டால், போராட்டம் நடத்தப்படும்.
அம்பத்தூர் க.பேரறிவழகன் (விசிகவின் தொழிலாளர் விடுதலை முன்னணி): 12 மணி நேர மசோதாவை முற்றிலும் ரத்து செய்யுமாறு திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT