Published : 25 Apr 2023 06:16 AM
Last Updated : 25 Apr 2023 06:16 AM
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த உப்பூரில் கோயில் திருவிழாவில் பங்கேற்றுவிட்டு, ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியவர்கள் மீது நேற்று அதிகாலை விரைவு ரயில் மோதியதில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
முத்துப்பேட்டை அருகேயுள்ள உப்பூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு காவடி எடுத்தல், சாமி வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
காவடி ஊர்வலத்தில் பங்கேற்ற 10-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு படுத்து உறங்கியுள்ளனர். இதில், உப்பூர் பிரதான சாலையைச் சேர்ந்த அருள்(17) (பிளஸ் 1 தேர்வு எழுதியுள்ளார்), கோபாலசமுத்திரம் பரத்(17) (பிளஸ் 2 முடித்துள்ளார்), நாகை மாவட்டம் வாய்மேட்டில் சவுண்ட் சர்வீஸ் கடை வைத்துள்ள தாணிக்கோட்டகம் முருகையன் மகன் முருகுபாண்டியன்(24) ஆகியோரைத் தவிர, மற்றவர்கள் எழுந்து சென்றுவிட்டனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் அந்த வழித்தடத்தில் சென்ற தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில், தண்டவாளத்தில் உறங்கிக்கொண்டிருந்த 3 பேர் மீதும் மோதியதில் அருள், முருகுபாண்டியன் ஆகியோர் தலை துண்டிக்கப்பட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த பரத், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார்.
திருவாரூர் - காரைக்குடி ரயில் வழித்தடத்தில், கடந்த 2 ஆண்டுகளாக இரவு நேரத்தில் ரயில் சேவை இல்லை. பகல் வேளையில் மட்டும் திருவாரூர்- காரைக்குடி இடையே சேவை இருந்தது.
காரணம் என்ன?: இதனிடையே, பிரதமர் மோடி அண்மையில், தாம்பரம்- செங்கோட்டை வாராந்திர விரைவு ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அந்த ரயில் 3-வது முறையாக இந்த வழித்தடத்தில் நேற்று வந்தபோதுதான் இளைஞர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த வழித்தடத்தில் இரவு நேரத்தில் அண்மையில் ரயில் சேவை தொடங்கப்பட்டது குறித்த விழிப்புணர்வு இல்லாததே 3 பேரும் தண்டவாளத்தில் படுத்து உறங்கியதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT