Published : 25 Apr 2023 06:37 AM
Last Updated : 25 Apr 2023 06:37 AM

சமூக ஆர்வலரை ஷூ காலால் உதைத்த எஸ்.ஐ. ஆயுத படைக்கு பணியிட மாற்றம்

நாகை மாவட்டம் நாகூர் வாஞ்சூர் ரவுண்டானாவில் நேற்று முன்தினம் இரவு சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்று மாறு வலியுறுத்திய ஆரோக்கியதாஸின் டீசர்ட்டை பிடித்து இழுத்துச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் பழனிவேல்.

நாகப்பட்டினம்: வாஞ்சூர் சோதனை சாவடியில் சமூக ஆர்வலரை ஷூ காலால் உதைத்த காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மாநில பகுதிகளில் இருந்து மதுபானம், சாராயம் கடத்தி வரப்படுவதைத் தடுக்கும் நோக்கில், தமிழகம் - புதுச்சேரி எல்லையான நாகை மாவட்டம் வாஞ்சூர் ரவுண்டானாவில் உள்ள 4 சாலைகளிலும், தடுப்புகள் அமைத்து போலீஸார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில், வாஞ்சூர் சோதனைச் சாவடி உள்ள சாலை மற்றும் திருமருகல் சாலை ஆகிய 2 சாலைகளும் கடந்த 3 மாதங்களாக ஒருவழிப் பாதையாக செயல்பட்டு வருகின்றன. திருமருகல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள், அரசுப் பேருந்துகள் மற்றும் கண்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத வகையில் நெருக்கமாக உள்ளதால், இந்த இடத்தை கடக்க ஓட்டுநர்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கும்பகோணத்தில் இருந்து திருமருகல் சாலை வழியாக நாகைக்கு வந்த 2 பேருந்துகள், தடுப்புகள் நெருக்கமாக இருந்ததால், அதை கடந்து செல்ல முடியாமல் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதைக் கண்ட அரசு கேபிள் டிவி அலுவலக தற்காலிக ஊழியரும், நாகூர் பெருமாள் தோட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலருமான ஆரோக்கியதாஸ் மற்றும் பொதுமக்கள் சென்று, தடுப்புகளை அகற்றி பேருந்துகள் எளிதாக செல்ல வழி ஏற்படுத்துமாறு வாஞ்சூர் சோதனைசாவடியில் இருந்த போலீஸாரிடம் கேட்டுக் கொண்டனர். அப்போது, பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டம் கூடியதால் போலீஸார் தடுப்புகளை அகற்றி, பேருந்துகள் செல்ல வழி ஏற்படுத்தினர்.

இந்நிலையில், அங்கு வந்த நாகூர் காவல் உதவி ஆய்வாளர் பழனிவேல், ஆரோக்கியதாஸை ஒருமையில் பேசி கடுமையாகதாக்கினார். அங்கிருந்த பொதுமக்கள் ஆரோக்கியதாஸுக்கு ஆதரவாக பழனிவேலை கண்டித்ததால், அவர் மேலும் ஆத்திரமடைந்து ஆரோக்கியதாஸின் டீ சர்ட்டை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துசென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றி, அங்கு ஷூ காலால் ஆரோக்கியதாஸை எட்டி உதைத்தார்.

இதைத்தொடர்ந்து, வாகனத்தில் இருந்த பிற போலீஸாரும், ஆரோக்கியதாஸை தாக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் நேற்று காலை விசாரணை நடத்தினர். தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் பழனிவேலை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

சமூக ஆர்வலர் மீது வழக்கு பதிவு: இதனிடையே, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆரோக்கியதாஸ் மீது நாகூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x