Published : 08 Sep 2017 12:34 PM
Last Updated : 08 Sep 2017 12:34 PM
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்குக் கோரி மதுரையில் நேற்று (வியாழக்கிழமை) தமுக்கம் மைதானம் வாயிலில் உள்ள தமிழன்னை சிலை முன் போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 1-ம் தேதி (செப்.1) அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வால் தனது மருத்துவக் கனவு தகர்ந்துபோனதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றம்வரை சென்றவர் அனிதா. மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன.
இந்நிலையில், நேற்று மதுரை தமுக்கம் மைதானம் வாயிலில் உள்ள தமிழன்னை சிலை முன் போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வழக்கமாக இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்யப்பட்டால் மாலையிலேயே விடுவிக்கப்படுவர்.
ஆனால், நேற்று கைது செய்யப்பட்ட 82 மாணவர்களில் ஒருவர் மட்டும் மைனர் என்பதால் விடுவிக்கப்பட்டார். எஞ்சிய 81 பேரில் 5 மாணவிகள் மதுரை பெண்கள் சிறையிலும் எஞ்சிய மாணவர்கள் திண்டுக்கல் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களை ஜாமீனில் விடுவிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
போராட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், புரட்சிகர மாணவ முன்னணி, பெண்கள் எழுச்சி இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT