Published : 24 Apr 2023 07:41 PM
Last Updated : 24 Apr 2023 07:41 PM

12 மணி நேர வேலை சட்ட மசோதா நிறுத்திவைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: "சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், '2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு' என்ற சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில், கடந்த 21-4-2023 அன்று “2023-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/2023)”, தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினைப் பெருக்கிடவும், குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடும் நோக்கிலும் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டது.

தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இருந்தாலும், சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், தலைமைச் செயலகத்தில் இன்று (24-4-2023) பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் “2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/2023)”- என்ற சட்டமுன்வடிவின் முக்கியமான பிரிவுகளில், குறிப்பாக தொழிலாளர் நலன் சார்ந்து, அவர்கள் பணிபுரிவதற்கான உகந்த பணிச்சூழல், தொழிலாளர்களுக்குப் போக்குவரத்து வசதி உள்ளிட்ட தொழிலாளர் நலன்கள் குறித்தும், இச்சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்தும் விரிவாக தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் உள்ள மிகச்சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அரசின் பரிசீலனைக்குப் பின்பே பணி நேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என்றும், எந்தச் சூழ்நிலையிலும், தொழிலாளர்களின் நலனில் சமரசம் செய்துகொள்ளப்பட மாட்டாது என்றும் அமைச்சர்கள் தெளிவாக எடுத்துரைத்தனர்.

மேலும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களைப் பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, தொழிலாளர் நலன் காக்கப்பட வேண்டும் என்பதிலும் அதே அளவு அக்கறை கொண்டுள்ளது என்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் அமைச்சர்கள் எடுத்துக்கூறினார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இச்சட்டமுன்வடிவினை நடைமுறைப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள், சிரமங்கள் குறித்து விவரமாக எடுத்துரைத்து, தங்களுடைய கருத்துக்களை அரசு பரிசீலிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர்.

ஒரு நாட்டின் தொழில் வளம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில் அமைதி ஆகிய மூன்றும் ஒன்றையொன்று சார்ந்தவை. தொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கின்ற அதே நேரத்தில், தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பேணுவதும் அரசின் நோக்கமாகும். நாட்டில் தொழிற்சாலைகள் பெருகுவதற்கு அங்கு தொழில் அமைதி மிக அவசியமானது. தொழிலாளர் நலன் காக்கப்பட்டால்தான் தொழில் அமைதி நிலவும் என்பதை உணர்ந்து திமுக அரசு எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தொழிலாளர் நலன் பேணும் அரசாகவே செயல்பட்டு வந்துள்ளது. தற்போது அதே சிந்தனையைத் தாங்கி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்துத் தந்த பாதையில், அதன் அடியொற்றி இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

திமுக அரசு எப்போதுமே தொழிலாளர் சமுதாயத்தின் தோழனாக, தொண்டனாக, காவல் அரணாக என்றென்றும் விளங்கும் என்பதற்கு கீழ்க்காணும் திட்டங்களே சான்றாகும். > 1969-ல் கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் தொழிலாளர் நலனில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, “தொழில், தொழிலாளர் நலம், கூட்டுறவு” என ஒன்றாக இருந்த மூன்று துறைகளிலிருந்து தொழிலாளர் நலனுக்கெனத் தனித்துறையையும், தனி அமைச்சகத்தையும் உருவாக்கியது;

  • ரத்தம் சிந்திப் போராடி, உயிர்த் தியாகம் செய்து, தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமைகள் குறித்த வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில், 1969 ஆம் ஆண்டில் மே முதல் நாளைச் சம்பளத்தோடு கூடிய பொது விடுமுறை நாளாக அறிவித்துச் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தியது;
  • 1969-ல் அவசரச் சட்டம் பிறப்பித்து விவசாயத் தொழிலாளர்க்கு நியாயமான கூலி வழங்க வகை செய்தது; பீடித் தொழில், பனியன் நெசவு, தோல் பதனிடும் தொழில், எண்ணெய் ஆலைகள், செங்கற் சூளை, உப்பளம் முதலியவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கப் பலம் இல்லாமையால் போதிய ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்பட்டு வந்த நிலைகண்டு அத்தொழிலாளர்களுக்குத் தொழில் முகவர்களிடம் பேசி, அவர்களுக்கெல்லாம் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கச் செய்தது;
  • தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் “பணிக்கொடை” வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியது;
  • விபத்துகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பதற்காகத் தொழில்-விபத்து நிவாரண நிதித் திட்டத்தை உருவாக்கியது;
  • கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்துடன் விவசாயத் தொழிலாளர் நல வாரியம், மீனவர் நலவாரியம், விவசாயத் தொழிலாளர் நலவாரியம், மகளிர் நலவாரியம், மாற்றுத் திறனாளிகள் நலவாரியம், கிராமக் கோயில் பூசாரிகள் நலவாரியம், நரிக்குறவர் நலவாரியம், தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியம் உள்ளிட்ட 36 அமைப்புசாரா நலவாரியங்களை உருவாக்கி உதவிகள் செய்தது தி.மு.க. அரசு;
  • 1990ஆம் ஆண்டு மேதின நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை நேப்பியர் பூங்காவிற்கு “மேதினப் பூங்கா”எனப் பெயரிட்டு, மேதின நினைவுச் சின்னத்தை நிறுவியர் கலைஞர்.
  • வேலைவாய்ப்பற்றோர் நிவாரண உதவித் தொகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது திமுக அரசு தான்.

முந்தைய திமுக ஆட்சியின்போது, அகில இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியினை ஆராய்ந்து இந்திய தொழிற்குழுமம் (Confederation Of Indian Industry) ஒரு அறிக்கை தயார் செய்தது. அந்த அறிக்கையில், இந்தியாவிலேயே தொழில் அமைதி நிலவுவதிலும், தொழிலாளர் நலன்களை பாதுகாப்பதிலும் தமிழகம் முதல் இடம் வகிக்கின்றது என்றும் குஜராத் இரண்டாவது இடம் என்றும் ஆந்திரப் பிரதேசம் மூன்றாவது இடம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போதும், கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழ்நாட்டில் நிலவும் அமைதியான தொழிற்சூழலின் காரணமாகவே, தொடர்ச்சியாக பல்வேறு பன்னாட்டு மற்றும் இந்தியப் பெருந்தொழில் நிறுவனங்கள் முதலீடுகள் செய்து, அதன்மூலம் நமது இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நல்லாட்சி தலைவர் கலைஞரின் வழியில் முனைப்போடு செயல்பட்டு வரக்கூடிய இந்த அரசு ஒரு சட்டமுன்வடிவை எந்த அளவு உறுதியுடன் கொண்டு வருகின்றதோ, அது குறித்து மக்களிடம் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் வரப்பெற்றால், அவற்றைச் சீர்தூக்கி ஆராய்ந்து, அவர்களின் கருத்துக்களுக்கிணங்க, அவற்றிற்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்துகொள்வதிலும் அதே அளவு உறுதி காணப்பட வேண்டும்.

அந்த வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், “2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/2023)”- என்ற சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x