Published : 24 Apr 2023 07:12 PM
Last Updated : 24 Apr 2023 07:12 PM

திருமண மண்டபங்களில் மது பரிமாற அனுமதி: சட்டத் திருத்தத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு 

சென்னை: திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் அரசின் சட்டத் திருத்த விதிகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து, தமிழ்நாடு அரசு சிறப்பு உரிமத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த சிறப்பு உரிமம், உரிமம் பெற்றவர் மற்றும் உரிமைதாரரால் குறிப்பிடப்பட்ட இடத்தில் பொது நிகழ்ச்சிகளில் விருந்தினர்கள், பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு மதுபானம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறப்பு உரிமம் குறித்த அறிவிப்பு கடந்த 2023 மார்ச் மாதம் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையால் வெளியிடப்பட்டது.

உரிமக் கட்டணத்தை செலுத்தியதன் பேரில் ஆட்சியரின் ஒப்புதலுடன் துணை ஆணையர், உதவி ஆணையர் (கலால்) மூலம் உரிமம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், "டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை தற்போது கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் தான் அமைக்க வேண்டும் என விதிகள் உள்ளன. இந்தநிலையில், திருமணம் போன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெறும் என்பதால், இந்த விதிகளை அனுமதித்தால், அது பொதுமக்கள் அமைதியாக வாழும் உரிமையை பாதிக்கும்.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த திருத்த விதிகளுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்" என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x