Last Updated : 24 Apr, 2023 06:47 PM

 

Published : 24 Apr 2023 06:47 PM
Last Updated : 24 Apr 2023 06:47 PM

புதுச்சேரி | 6 மாதங்களே உள்ள மாநில தேர்தல் ஆணையம் பதவிக்காலம்; உள்ளாட்சி தேர்தல் நடப்பது எப்போது?

கோப்புப் படம்

புதுச்சேரி: புதுவையில் இன்னும் ஆறு மாதங்களே மாநில தேர்தல் ஆணையம் பதவிக்காலம் உள்ளது. எனினும் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் 12 ஆண்டுகளாக நடக்காத சூழலே உள்ளது. மேலும் தேர்தல் நடக்க தற்போதைய முக்கியத் தேவையான பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு கணக்கெடுப்பு எப்போது நடக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

புதுச்சேரியில் இதுவரை இரண்டு முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. கடந்த 1968 ஆம் ஆண்டு முதல் முறையாக நடந்தது. அதையடுத்து 36 ஆண்டுகளுக்குப் பின்பு கடந்த 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.

2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் 2011 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தனர். அதன் பிறகு 12 ஆண்டுகளாகியும் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இதனால் புதுச்சேரிக்கு மத்திய அரசின் நிதி கிடைக்கப்படாமல் உள்ளது. தற்போதைய மக்கள் பிரதிநிதிகளும், பெரும்பாலான அரசியல் கட்சிகளும் இதை பெரிதாக கண்டுக் கொள்வதில்லை. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி கடந்த 2019ல் அரசு தேர்தல் நடத்த பணிகளைத் துவக்கியது.

தேர்தல் ஆணையரின் பதவிகாலம் இன்னும் ஆறுமாதங்கள்தான் : கடந்த 2019ம்ஆண்டு ஜூலையில் உள்ளாட்சி துறை மூலமாக அப்போதைய அத்துறை அமைச்சர் நமச்சிவாயம், அப்போதைய முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சரவைக்கு தெரியாமல் உள்ளாட்சித் தேர்தல் ஆணையரை நியமிக்க விளம்பரம் வெளியானது. இதற்கு காரணமாக இருந்தோர் மீது நடவடிக்கை எடுப்பதாக பேரவையில் தெரிவிக்கப்பட்டு ஏதும் செய்யப்படவில்லை. ஆளுநர் கிரண்பேடி பின்புலமே இதற்கு காரணம் என்று சட்டப்பேரவையில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த விளம்பரத்தை ரத்து செய்து சட்டப் பேரவையை கூட்டி புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் ஆணையராக பாலகிருஷ்ணனை முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.

கடந்த 2019 டிசம்பர் 20-ம் தேதி மாநில தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணனை நியமித்தது செல்லாது என்று ஆளுநர் கிரண்பேடி ஒரு ஆணையை வெளியிட்டார். இந்நிலையில், முதல்வர் உத்தரவை மீறி மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க விண்ணப்பங்களை வரவேற்று 2020ம் ஆண்டு ஜன.7 உள்ளாட்சி துறை விளம்பரம் வெளியிட்டது.

இதையடுத்து நீதிமன்றத்தை நாடினர். புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் நியமன விவகாரத்தில் ஆளுநர் கிரண்பேடி உத்தரவுக்கு எதிராக நமச்சிவாயம் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் மார்ச்சில் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து அப்போதைய ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி மாநில தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரியான ராய் பி தாமஸை நியமித்தார். அவர் 21.10.2020ல் பதவியேற்றார். இவரது பதவிகாலம் 3 ஆண்டுகாலம். தற்போது வரை இரண்டரை ஆண்டுகள் பதவிகாலம் முடிந்துவிட்டது. இன்னும் ஆறுமாதங்கள் மட்டுமே அவரது பதவிக்காலம் உள்ளது.

கடந்த 2021 செப்டம்பரில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்காததால் எதிர்கட்சித்தலைவர் சிவா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதனை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் அரசு உறுதியளித்தது போல ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைத்தது. இந்த கமிஷன் பிற்படுத்தப்பட்டோர் குறித்த தகவல், புள்ளிவிபரங்கள், ஆவணங்களை சேகரித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது.

அனைத்து ஆய்வு பணிகளையும் முடித்த தனிநபர் கமிஷன் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு இடஒதுக்கீடு செய்ய வீடு, வீடாக கணக்கெடுப்பு நடத்த பரிந்துரை செய்துள்ளது. இந்த கணக்கெடுப்பு நடத்த ஆளுநர் தமிழிசையும் மூன்று மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுபற்றி அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, " நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் வார்டு வாரியாக உள்ள பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யும் பணி தொடங்க வேண்டும். எத்துறை மூலம் கணக்கெடுப்பு நடத்தலாம் என அரசு முடிவு எடுக்க வேண்டும்.அந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன், அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தரப்படும். அதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை." என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x