Published : 24 Apr 2023 06:29 PM
Last Updated : 24 Apr 2023 06:29 PM
மதுரை: "நான் தமிழக பாஜக தலைவராக இருந்தபோது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது" என்று புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்தார். அதனையொட்டி சித்திரைத் திருவிழா நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். கோயிலுக்குள் சென்று சுமார் 45 நிமிடம் தரிசனம் செய்தார். பின்னர் அம்மன் சன்னதி வாசல் வழியாக வெளியே வந்தார்.
பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "அன்னை மீனாட்சியை தரிசிக்க வந்தேன். மதுரை மக்களுக்கு சித்திரைத் திருவிழா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெயில் அதிகமாக இருக்கிறது.கோயிலுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். நீர் ஆகாரம் அதிகமாக அருந்த வேண்டும்.
இந்தியா முழுவதும் கரோனா தொற்று 10 ஆயிரம் பேருக்கு ஏற்பட்டுள்ளது. இன்னும் அதிகமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்கள் நெரிசலாக இருக்கும் இடங்களில் ‘மாஸ்க்’ அணிய வேண்டும். மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
நான் ஆளுநராக இருப்பதால் அரசியல் பேசக்கூடாது. ஆனால் நான் தமிழக பாஜக தலைவராக இருந்தபோது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. இப்போதைய தலைவர் பற்றி கருத்து சொல்ல முடியாது. அதை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT