Published : 24 Apr 2023 05:53 PM
Last Updated : 24 Apr 2023 05:53 PM

12 மணி நேர வேலை மசோதா | அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு 

செய்தியாளர்களைச் சந்தித்த சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராஜன்

சென்னை: "12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக, தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்" என்று அமைச்சர்கள் குழு கூறியதாக சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை செய்ய வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் குழு திங்கள்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் பல்வேறு துறைச் செயலாளர்கள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். மேலும், தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் 12 மணி நேர வேலை மசோதாவுக்கு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "3 அமைச்சர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், இந்த சட்டம் அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ வெளியே சொல்லக்கூடிய எந்த பாதுகாப்பையும் உள்ளடக்கிய திருத்தம் அல்ல. அதுவெறுமனே வாய் வார்த்தைகளில் மட்டுமே சொல்வது. அந்த சட்டத்தில் அதுபோன்ற எந்த பாதுகாப்பும் இல்லை.

இப்போது இருக்கின்ற சட்டத்திலேயே பல தொழிற்சாலைகளுக்கு குறிப்பிட்ட நேர்வுகளில், சில சலுகைகளைத் தரமுடியும். விதிவிலக்கும் கொடுக்க முடியும். அவ்வாறு இருக்கும்போது, அந்த ஷரத்துகளையே ஒத்திவைப்பது, தள்ளிவைப்பது, விலக்களிப்பது என்ற ஒரு திருத்தத்தைக் கொண்டு வருவது அபாயகரமானது. இது ஒவ்வொரு தொழிலாளியும் அச்சப்பட வேண்டிய ஒரு விசயம்.

எனவே அதனை எந்தக் காலத்திலும் ஏற்க முடியாது என்று பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அனைத்து சங்கங்களுமே கூறியிருக்கிறோம். 9 தொழிற்சங்கங்கள் இணைந்த எங்களது கூட்டமைப்பு சார்பில் நேற்று பேசி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். இந்த சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்பதே அந்த தீர்மானம். இதுதொடர்பாக அரசிடம் இருந்து விளக்கம் பெற வேண்டிய தேவை தொழிற்சங்கங்களுக்கு இல்லை.

இந்த சட்டம் தொடர்பான சிறிய திருத்தங்களுக்குக்கூட வழியும், வாய்ப்பும் இல்லை. எனவே சட்டத்திருத்தம் 65-ஏ வை முற்றாக ரத்து செய்ய வேண்டுமென்று, தீர்மானத்தைக் கொடுத்துள்ளோம். இதை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் அரசிடம் வலியுறுத்தியிருக்கிறோம்" என்றார்.

அப்போது அமைச்சர்கள் உங்களது கருத்துகளுக்கு என்ன பதிலளித்தனர் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "முதல்வர் தற்போது வேறொரு கூட்டத்தில் இருக்கிறார். நீங்கள் கூறிய கருத்துகளை எல்லாம் பதிவு செய்திருக்கிறோம். இந்த கருத்துகளையும், உங்களது உணர்வுகளையும் முதல்வரிடம் இன்றே எடுத்துக்கூறுவோம். முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்" என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x