Published : 24 Apr 2023 12:31 PM
Last Updated : 24 Apr 2023 12:31 PM
சென்னை: “திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் மற்றும் வீடுகளில் மது பரிமாற அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், அந்த அரசாணை திரும்பப் பெறப்படும் வரை மக்களைத் திரட்டி மிகக் கடுமையான பல கட்ட போராட்டங்களை எனது தலைமையில் பா.ம.க. முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் மற்றும் வீடுகளில் மதுவை இருப்பு வைக்கவும், விருந்தினர்களுக்கு பரிமாறவும் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு மிக மோசமான சமூக, பண்பாட்டு சீரழிவுக்கு வழிவகுக்கும். மக்கள்நலனில் சிறிதும் அக்கறையின்றி, அரசின் வருவாயையும், சில தனி ஆள்களின் வருவாயையும் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கமுக்கமாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு இரு நாட்கள் முன்னதாக வெளியிடப்பட்ட தமிழக அரசின் சிறப்பு அரசிதழ் அறிவிக்கையில், இது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் போன்ற வணிக பயன்பாட்டு இடங்களில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள், விருந்து நிகழ்ச்சிகளில் சிறப்பு உரிமம் பெற்று, மதுவை இருப்பு வைக்கவும், பரிமாறவும் சிறப்பு உரிமம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மது பரிமாறுவதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து ஒற்றை வரியில் விவரிக்க வேண்டும் என்றால், ‘எங்கும் மது வெள்ளம்... எப்போதும் மது வெள்ளம்’ என்றுதான் குறிப்பிட வேண்டும். அரசின் இந்த முடிவை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த முடிவால் ஏற்படவிருக்கும் சமூக, பண்பாட்டுச் சீரழிவுகளும், கேடுகளும் கற்பனை செய்து பார்க்க முடியாதவை. மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த அரசும் இப்படி ஒரு முடிவை எடுக்கத் துணியாது. ஆனால், தமிழ்நாட்டில் மதுவைக் கையாளும் உரிமை சில குழுக்களுக்கு வழங்கப்பட்டதன் விளைவுதான் இத்தகைய மிக மோசமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் போன்றவை வணிக பயன்பாட்டு இடங்கள் மட்டும் அல்ல... அவை பொதுமக்கள் கூடும் இடங்கள். திருமண அரங்கங்களில் நடைபெறும் திருமண நிகழ்வுகளாக இருந்தாலும், பிற கொண்டாட்டங்களாக இருந்தாலும் அதில் பெண்களும், குழந்தைகளும் கலந்து கொள்வதை தவிர்க்க முடியாது. அத்தகைய இடங்களில் மது வினியோகிக்கப்பட்டால் என்னென்ன தீய விளைவுகள் ஏற்படும் என்பதை இந்த முடிவை எடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களால் சிந்திக்க முடியவில்லையா? அல்லது இப்படி ஓர் அனுமதியைக் கொடுப்பதால் தங்களுக்கு கிடைக்கப் போகும் பயன்கள் அவர்களின் கண்களை மறைத்து விட்டதா? என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.
திருமண அரங்கங்களும், விருந்துக் கூடங்களும் ஊருக்கு வெளியில் தனித்து இருப்பவை அல்ல. மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் தான் அவை உள்ளன. அந்த இடங்களில் ஒரே நேரத்தில் குறைந்தது ஆயிரம் பேர் முதல் பல்லாயிரக்கணக்கானோர் வரை கூடுவார்கள். அவர்களில் பாதிப் பேர் மது அருந்துவதாக வைத்துக் கொண்டால், அடுத்த சில நிமிடங்களில் அப்பகுதி மனிதர்கள் நடமாடும் பகுதியாக இருக்காது. திருமண அரங்கங்கள், விருந்துக் கூடங்களுக்கு அருகில் வீடுகள், ஆலயங்கள், பள்ளிகள் போன்றவை நிறைந்திருக்கும். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் மது அருந்தினால், அவர்களின் அட்டகாசங்களால் அப்பகுதிகளில் பெண்கள், குழந்தைகள் நடமாட முடியாத நிலை உருவாகும். அதுமட்டுமின்றி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விபத்துகளும், சட்டம் & ஒழுங்கு சிக்கல்களும் அதிகரிக்கும்.
அதைவிடக் கொடுமை என்னவென்றால், வீடுகளில் நடைபெறும் நிகழ்வுகளிலும் மதுவை பரிமாறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது தான். தமிழ்நாட்டின் மதுக் கொள்கையின்படி குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை அனுமதிக்கக் கூடாது; பள்ளிகள் மற்றும் கோயில்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் மதுக்கடைகள் இருக்கக் கூடாது. ஆனால், தமிழக அரசு அளித்துள்ள புதிய அனுமதிகளின் அடிப்படையில் இந்த விதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்படும். கோயில்களுடன் இணைந்த திருமண அரங்கங்களில் கூட மது பரிமாறப்படக்கூடும். மதுக்கடைகளில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் தான் மது வணிகம் செய்யப்படும். ஆனால், தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு உரிமத்தின்படி எந்த வகையான நேரக் கட்டுப்பாடும் இல்லை. 24 மணி நேரமும் மது வெள்ளம் பாய அரசு கதவுகளை திறந்து விட்டுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் திறந்தவெளி குடிப்பகமாக மாறிவிடக் கூடும்.
திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் போன்ற இடங்களில் மது அருந்துவதற்கு அனுமதி அளிக்கும் முடிவை தமிழக அரசு கடந்த மார்ச் 18-ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டுள்ளது. அரசின் வழக்கமான கொள்கைகளில் சிறிய மாற்றம் செய்யப்பட்டால் கூட பத்திரிகை செய்திகளின் மூலம் அதை மக்களுக்கு தெரிவிக்கும் அரசு இது குறித்து இன்று வரை வெளிப்படையாக அறிவிக்காமல் கமுக்கமாக வைத்திருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறைக்கான மானியக் கோரிக்கையில் கூட இது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அந்த அளவுக்கு இந்த கமுக்கமாக வைத்திருக்க அரசு முயற்சி செய்திருக்கிறது. மார்ச் 18-ஆம் தேதியிட்ட அரசிதழ் மற்றும் அது குறித்த செய்தி தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியானதைத் தொடர்ந்து தான் இந்த விஷயம் வெளியில் வந்திருக்கிறது. இது வெளியில் தெரியக்கூடாது அளவுக்கு தீய செயல் என்பதை தமிழ்நாடு அரசே உணர்ந்திருந்தும் அதற்கு அனுமதி அளித்தது ஏன்?
2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின் போது முதல் நாள்... முதல் கையெழுத்து... முழு மதுவிலக்கு என்ற முழக்கத்தை பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்தது. அடுத்த சில நாட்களில் திமுகவும் அதே முழக்கத்தை எதிரொலித்தது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது மதுவிலக்கு குறித்து எதுவும் கூறாமல் திமுக அமைதி காத்தாலும் கூட, முதலமைச்சராக பதவியேற்ற பிறகு கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தில்லி சென்று பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். ஆனால், அதற்கு மாறாக, மதுவை வெள்ளமாக பாயச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றால், இவையெல்லாம் முதல்வருக்கு தெரிந்து, அவரது ஒப்புதலுடன் தான் நடைபெறுகிறதா? என்ற ஐயம் எழுகிறது. மதுவிலக்கு குறித்த தமிழக அரசின் கொள்கை என்ன? என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.
வருமானம் ஈட்டுவதற்காக எதையும் செய்யலாம் என்பது மக்கள் நல அரசின் கொள்கையாக இருக்க முடியாது. 1967-ஆம் ஆண்டில் அண்ணா தலைமையிலான திமுக அரசு பதவியேற்றது. அப்போது நிலவிய நிதி நெருக்கடியை சமாளிக்க மதுக்கடைகளை திறக்கலாம் என்று அதிகாரிகள் யோசனை தெரிவித்தனர். ஆனால், அதை ஏற்க அண்ணா மறுத்து விட்டார்.‘‘அரசின் வருமானத்திற்காக மது விலக்கை ரத்துச் செய்வது மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதற்கு ஒப்பானது! மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம்’’ என்று கூறி மதுவிலக்குக் கொள்கையில் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். ஆனால், இப்போது அவரால் தொடங்கப்பட்ட கட்சியின் ஆட்சியில் மது வெள்ளமாக பாய அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்?
தமிழ்நாட்டை ஒரு சொட்டு மது கூட இல்லாத மாநிலமாக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம். அதற்கு மாறாக மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பெயருக்கு தீரா அவப்பெயரையும், துடைக்க முடியாத களங்கத்தையும் ஏற்படுத்தி விடும். இதை உணர்ந்து திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் மற்றும் வீடுகளில் மது பரிமாற அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் அரசாணை திரும்பப் பெறப்படும் வரை மக்களைத் திரட்டி மிகக் கடுமையான பல கட்ட போராட்டங்களை எனது தலைமையில் பா.ம.க. முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT