Published : 24 Apr 2023 04:20 AM
Last Updated : 24 Apr 2023 04:20 AM
சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் வரும் மே மாதத்தில் இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
வரும் 2024 ஜன.11, 12-ம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று, மே 7-ம் தேதி 3-ம் ஆண்டு தொடங்க உள்ளது. இந்த சூழலில், அதிக முதலீடுகளை ஈர்ப்பதுடன், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பல திட்டங்களை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
இதற்காக வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவர் மே 23-ம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, ஜப்பான், சிங்கப்பூர் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. அங்கு முதலீட்டாளர்கள் சந்திப்பை கருத்தில் கொண்டு, 4-5 நாட்கள் கொண்டதாக முதல்வரின் பயணத் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, டென்மார்க், பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பயணம் மேற்கொண்டுள்ளார். தொழில் துறை அதிகாரிகளும் லண்டன், ஜப்பான், சிங்கப்பூர் சென்று, தொழில் முதலீட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்மே 2-ல் நடக்க உள்ளது. இதில், முதல்வரின் வெளிநாட்டு பயணம் மற்றும் புதிய முதலீடுகளுக்கான சலுகை உள்ளிட்டவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அன்றையதினம் வெளியாகும் என அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT