Published : 24 Apr 2023 06:20 AM
Last Updated : 24 Apr 2023 06:20 AM
சென்னை: தமிழகத்தில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து வரும் 26-ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும், மே 12-ம் தேதி வேலைநிறுத்தம், மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எம்எல்எஃப், எல்எல்எஃப் உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் வருமாறு:
தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணிநேரமாக அதிகரிப்பது தொடர்பாக கடந்த 21-ம் தேதி சட்டப்பேரவையில் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களிடம் தமிழக அரசு ஆலோசனை நடத்தவில்லை. ஏற்கெனவே இதுபோன்ற கோரிக்கை, மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, அது நிராகரிக்கப்பட்டதையும் அரசு கவனத்தில் கொள்ளவில்லை.
பல்வேறு நாடுகளில் 5 நாட்கள் வேலை, நாளொன்றுக்கு 7 மணி நேரம்வேலை என்று வேலை நேரத்தைக் குறைத்து வரும் நிலையில், முதல் முறையாக வேலை நேரத்தை அதிகரித்து மசோதா நிறைவேற்றியுள்ளது ஏற்கத்தக்கதல்ல.
ஏற்கெனவே இதுபோன்ற சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்தபோது, தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்த்தன. மத்திய அரசால் இதுவரை செயல்படுத்த முடியாத சட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த மசோதாநிறைவேற்றியுள்ளது கண்டனத்துக்குரியது.
இதன் மீது விளக்கம் பெறுவதோ, பேரம் பேசி உடன்பாட்டுக்கு வருவதோஎந்த வகையிலும் சாத்தியமானதல்ல. எனவே, இந்தச் மசோதாவைக் கைவிட வேண்டும்.
எனவே, வரும் 26-ம் தேதி முதல்தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன. வரும் 24-ம் தேதிதொழிற்சாலைகள் முன் வாயிற்கூட்டம், 27-ம் தேதி வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்குதல், 28-ம் தேதிகருப்பு பட்டை அணிதல் மற்றும் ஆலைகளில் மதிய உணவு புறக்கணிப்பு, மே 4, 5-ம் தேதிகளில் இருசக்கர வாகனப் பிரச்சாரம், மே 9-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், மே 12-ம் தேதி மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம், மறியல் போராட்டங்கள் நடத்துவது. இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், தொமுச மற்றும் அண்ணா தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT