Published : 24 Apr 2023 06:04 AM
Last Updated : 24 Apr 2023 06:04 AM
சென்னை: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது போன்று வெளியான ஆடியோவை, சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கைக்கு உட்படுத்தவேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் மருமகன் சபரீசன் ஆகியோரை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துப்பேசியது போன்ற ஆடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியது. இது ஜோடிக்கப்பட்ட ஆடியோ என்று பழனிவேல் தியாகராஜன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆடியோ குறித்த நிதியமைச்சரின் விளக்கத்தை திமுக ஐ.டி. பிரிவைத் தவிர, வேறு யாரும் நம்பமாட்டார்கள்.
திமுக ஐ.டி. பிரிவால் போலியாக ஆடியோ பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆடியோவை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பத் தடுப்பது எது? தன்னை தற்காத்துக் கொள்வதற்காக அமைச்சர் பொய்கூறுகிறார். ஒராண்டில் ரூ.30,000 கோடி வந்தது குறித்து மக்களுக்கு முதல்வர் விளக்க வேண்டும்.
‘இந்த ஆடியோ பொய்யானது. யார் வேண்டுமானாலும் இப்படி பேசி வெளியிட முடியும்’ என்று பழனிவேல் தியாகராஜன் விளக்கம்அளித்துள்ளார்.
அது சாத்தியம் என்றால், அவர்அந்த ஆடியோவில் பேசிய அதேகருத்துகளை நான் பேசுவதுபோல ஓர் ஆடியோ வெளியிட வேண்டும்என்று சவால் விடுகிறேன். என் குரல்மாதிரியை ஆய்வுக்கு வழங்குகிறேன். இரு ஆடியோ மாதிரிகளையும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடக்கும் விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம். இரண்டு ஆடியோக்களின் உண்மைத்தன்மையை நீதிமன்றம் விசாரிக்கட்டும்.
இதுபோன்ற கதைகளை நம்புவதற்கு, மக்கள் ஒன்றும் திமுகவினர் அல்ல. இந்த ஆடியோவின் உண்மைத்தன்மையை சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆளுநரிடம் பாஜக மனு: இதற்கிடையில், பாஜக மாநிலத்துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், மாநிலச் செயலாளர்கள் சதீஷ்குமார், அனந்த பிரியா உள்ளிட்டோர் ஆளுநரிடம் நேற்று மனு அளித்தனர்.
இதுகுறித்து வி.பி.துரைசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்த ஆடியோவை தடயவியல் தணிக்கைக்கு உட்படுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஆளுநரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். ஆடியோவில் இருப்பது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குரல்தான் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் மறுத்தால், அதை நிரூபிக்க தனி நபர் ஆணையம் அமைக்குமாறு ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT