Published : 24 Apr 2023 05:44 AM
Last Updated : 24 Apr 2023 05:44 AM

பிடிஆர் ஆடியோ விவகாரம் | மத்திய அரசின் புலன் விசாரணைக்கு வலியுறுத்துவோம் - எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி

மதுரை: ‘சர்ச்சைக்குரிய ஆடியோவில் பேசியிருப்பது நிதி அமைச்சர்தான். இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வர மத்திய அரசின் புலன் விசாரணைக்கு வலியுறுத்த உள்ளோம்’ என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி தெரிவித்தார்.

மதுரை விமானநிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. திமுக தொழிலாளர்களுக்கு விரோதமாக இந்தச் சட்டத்தைக் கொண்டு வருகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலினே இந்தச் சட்டத்தை எதிர்த்தார்.

சட்டப்பேரவையில் அதிமுக மக்களுக்கான பிரச்சினைகளைப் பேசி வருகிறது. ஆனால், முதல்வரால் எங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியவில்லை. மிகவும் கோபப்படுகிறார்.

ஆடியோ விவகாரத்தில், நிதி அமைச்சரே பேசிவிட்டு தற்போது புனையப்பட்டது என்று எப்படிச் சொல்ல முடியும். எனவே இதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ரூ.30,000 கோடி ஊழல் செய்யப்பட்டது என்று நிதி அமைச்சரே வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் இதுபோல நிறைய பேரின் ஆடியோ வருகிறது. அப்போதெல்லாம் அவற்றை நாங்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், நிதி அமைச்சர் மறுப்பு அறிக்கைவிட்ட பிறகுதான், இதில் ஏதோ இருக்கிறது என்று தோன்றுகிறது. அவர் குரல்தானா இது என்பதை மனசாட்சிப்படி ஆய்வு செய்து கொள்ளுங்கள். இந்த ஆடியோவின் பின்னணியில் எங்களுக்குப் பெரிய சந்தேகமே உள்ளது.

ரூ.30,000 கோடி பணத்தை என்ன பண்ணுவது, எங்கு வைப்பது என்று தடுமாறிக் கொண்டிருக்கின்றனர் என அவர் கூறிய இந்த ஆதாரத்தை வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டும். சாதாரண மனிதர் அப்படி பேசவில்லை. ஒரு மாநிலத்தின் நிதி அமைச்சர் பேசுகிறார். இதுதொடர்பாக மத்திய அரசு புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவோம். ஆளுநரிடம் இதுகுறித்து முறையிடுவோம். உண்மையென்றால், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏதேதோ விஷயங்களுக்காக அறிக்கை வெளியிடும் முதல்வர், இது போலி என்று அறிக்கை வெளியிடவேண்டியதுதானே. ஆதாரமே இல்லாமல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது எப்படியெல்லாம் வழக்குகள் புனையப்படுகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாககொண்டு செயல்பட்டுள்ளனர். இன்னும் 3 ஆண்டுகள் இருக்கின்றன என்பதை நினைத்து பார்க்கவே அதிர்ச்சியாக உள்ளது.

நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்யிருக்கும்போது ஓபிஎஸ் தரப்பினர் இரட்டை இலை சின்னத்தையும், கொடியையும் போட்டு விளம்பரம் கொடுக்கிறார்கள். அதை ஊடகங்கள் எப்படி வெளியிடுகின்றன என்று தெரியவில்லை.

கோடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததைக் கண்டுபிடித்து வழக்குப்போட்டு அவர்களை சிறையில் அடைத்தது அதிமுக ஆட்சியில்தான். ஆனால், திமுக வழக்கறிஞர்கள் வாதாடி கோடநாடு வழக்கில் தொடர்புடையோருக்கு ஜாமீன் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கும், கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டோருக்கும் உள்ள தொடர்பு என்ன?

என் மீது எப்படியாவது வழக்குப் போடுவதற்கு எனக்கு சொத்துகள் இருக்கிறதா? என்று தேடித்தேடிப் பார்த்தார்கள். என்னிடம் சொத்து இருந்தால்தானே வழக்குப்போட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x