Published : 04 Sep 2017 02:41 PM
Last Updated : 04 Sep 2017 02:41 PM

குட்டைகள் நிரம்பியதால் ஆற்றைப் பற்றி கவலையில்லை: வினோத மகிழ்ச்சியில் கண்ணம்பாளையம் கிராமம் 

கோவை கண்ணம்பாளையம் பேரூராட்சி கிராமங்களில் நேற்று முன்தினம் பெய்த மழையால் உள்ளூரில் 4 குட்டைகள் நிரம்பியதால் மகிழ்ச்சி பொங்குகின்றனர் இப்பகுதி மக்கள். அடுத்து ஒரு மழை பெய்தால் இந்த குட்டைகள் நிரம்பி வழிந்து குளத்தையும் நிரப்பி விடும். அப்படி நடந்தால் நாங்கள் ஆற்றை நம்ப வேண்டியதில்லை என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் கடும் மழை பெய்து நொய்யல் ஆற்றில் தண்ணீர் வந்து, அதன் வாய்க்கால் மதகுகள் திறந்துவிடப்பட்டால் மட்டுமே குளத்திற்கு நீர் நிரம்பும். அதை வைத்து கிராமத்துக் குட்டைகளில், கிணறுகளில் நீர் நிறைந்து நிலத்தடி நீரும் உயரும். இதுதான் நொய்யல் ஆறு பாயும் கோவை மாவட்டத்து கிராமங்களின் நிலை. சாக்கடை, சாய, சலவைப் பட்டறை மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளால் நொய்யல் ஆற்றை நம்பி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு நீண்ட காலமாகி விட்டது.

மழை வெள்ளக் காலங்களில் நொய்யலில் பொங்கும் தண்ணீரை குளங்களுக்கு விட்டு நிரப்பினால் மட்டுமே நிலத்தடி நீர் உயரும் என்ற நிலை. கண்ணம்பாளையத்தில் உள்ள 98 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தை பொறுத்தவரை 20 ஆண்டுகளாகவே மழை வெள்ளக்காலங்களில் கூட தண்ணீரைக் காண முடியவில்லை. ஏனென்றால் இந்த குளத்திற்கு வரும் வாய்க்கால்கள், மதகுகள் அடைபட்டு கிடந்தன. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதற்காக போராட்டம் நடத்தி அதை சரிப்படுத்த வைத்தனர் மக்கள்.

அதன் பிறகு முறைப்படி குளத்திற்கு தண்ணீர் வந்தும் ஊர்க்குட்டைகளில் தண்ணீர் நிரம்பவில்லை. நிலத்தடி நீரும் உயரவில்லை. காரணம் இந்த ஊரில் உள்ள மல்லியன்கோயில் குட்டை, பாப்பம்பட்டி ரோடு குட்டை, தோடக்காரன் தோட்டக்குட்டை, கோமாளி தோட்டம் குட்டை ஆகியவை குளத்தை விட 40 அடி உயரத்தில் இருந்தது. எனவே ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து குளத்திற்கு ஒட்டி ஒரு கிணறு தோண்டி அதில் ஊறும் நீரை 50 எச்.பி மோட்டார் வைத்து 1 அடி விட்டமுள்ள குழாய்கள் மூலம் 1.5 கிலோமீட்டர் தூரம் கொண்டு சென்று முதலிரண்டு குட்டைகளை நிரப்ப ஆரம்பித்தனர். இதனால் முன்பு ஆயிரம் அடிக்கு கீழே இருந்த நிலத்தடி நீர் 300 அடிக்கும் குறைவாகவே கிடைக்க ஆரம்பிக்க மகிழ்ந்தனர் மக்கள்.

அந்த வகையில் நொய்யலில் மழைக்காலங்களில் தண்ணீர் வந்தால் 3 முதல் 6 மாதங்களுக்கு ஒரு முறை தண்ணீர் திறந்து குளத்தை நிரப்பவும், அதிலிருந்து குட்டைகளில் தண்ணீர் தீரும்போதெல்லாம் மாதத்திற்கு ஒரு முறை மோட்டார் போட்டு தண்ணீர் பாய்ச்சுவதையும் நீக்கமற செய்து வந்தனர் மக்கள். இதற்காக பஞ்சாயத்து மூலம் குளத்துக் கமிட்டி என்று ஒன்றும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 3 ஆண்டுகளாக நடந்து வரும் இந்தப் பணிகள் கடந்த சில மாதங்களாக கேள்விக்குறியானது. ஏனென்றால் மழை இல்லை.

ஆற்றிலும் தண்ணீர் இல்லை. குளமும் வரலாறு காணாத வறட்சியை சந்தித்தது. 3 மாதங்களுக்கு முன்பு குளத்திலிருந்து குட்டைக்கு தண்ணீர் எடுத்து விட்ட நிலையில் தற்சமயம் குளத்திலும் தண்ணீர் சேறும் சகதியுமாக மாறி விட்டது. குட்டைகளும் வற்றி விட்டது. இனி தண்ணீர் இறைக்க என்ன செய்வது என்று புரிபடாத நிலையில் குளத்துக் கமிட்டி பரிதவித்த நிலையில்தான் நேற்று முன்தினம் இப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. அதன் மூலம் ஊரில் உள்ள நான்கு குட்டைகளும் ஒரே நாளில் நிரம்பி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து கண்ணம்பாளையம் முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன் கூறுகையில், ''இந்த நான்கு குட்டைகளும் 4 முதல் 16 ஏக்கர் பரப்பளவு கொண்டவை. இது நிரம்பி வழிந்தால் தண்ணீர் குளத்திற்கு செல்லும் வகையில் உள்ளது. இனி மழைபெய்து குட்டை வழிந்தால் நீர் நேராக குளத்திற்கு சென்று விடும். குளமும் நிரம்பி விடும். இப்போதைக்கு குட்டைகள் நிரம்பியிருப்பதால் 3 மாதத்திற்கு கவலை இல்லை. குளமும் நிரம்பினால் 6 மாதங்களுக்கு ஆற்றில் தண்ணீரை எதிர்பார்க்க வேண்டியதில்லை!'' எனக் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x