Last Updated : 06 Sep, 2017 11:01 AM

 

Published : 06 Sep 2017 11:01 AM
Last Updated : 06 Sep 2017 11:01 AM

47-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த குமரி விவேகானந்தர் மண்டபம்: கடலில் பயணித்து இதுவரை 6.12 கோடி பேர் பார்வை - படகுத்தளம் விரிவாக்கத்துக்கு பிறகு 30% அதிகரிக்க வாய்ப்பு

கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் திறக்கப்பட்டு 46 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், படகு பயணம் மேற்கொண்டு இதுவரை 6 கோடியே 12 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர். படகுத் தளம் விரிவுபடுத்தும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இப்பணி முடிவுற்றதும் கூடுதலாக 30 சதவீதம் பேர் பார்வையிட வாய்ப்பு உருவாகும்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து, ஓராண்டுக்கு 1 கோடியை எட்டும் நிலையில் உள்ளது.

கடலில் படகு சவாரி மேற்கொண்டு இங்குள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிடுவது சுற்றுலா பயணிகளுக்கு முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாகவும், மறக்கமுடியாத சுற்றுலா அனுபவமாகவும் திகழ்கிறது.

சுற்றுலாத்துறை மேம்பாடு

சுன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுப்பதில் முதன்மையான காரணியாக விவேகானந்தர் மண்டபம் விளங்குகிறது. கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் தியானம் செய்ததன் நினைவாக விவேகானந்தர் நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது. 1970-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி இந்த மண்டபம் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அன்று முதல் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

படகு சவாரி மூலம் தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. மேலும், சுற்றுலாத்துறையும் மேம்பாடு அடைந்துள்ளது.

6.12 கோடி பேர் பார்வை

சுற்றுலா பயணிகள் பார்வையிட விவேகானந்தர் மண்டபம் அனுமதிக்கப்பட்டு 46 ஆண்டுகள் நிறைவடைந்து, 47-வது ஆண்டை எட்டியுள்ளது. ஆண்டுதோறும் இந்த நாளில் படகு சவாரி செய்து விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கவுரவிக்கப்படுவார்கள்.

கடந்த 46 ஆண்டுகளில் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்ட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6 கோடியே 12 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுகுறித்து சுற்றுலாத்துறையினர் கூறியதாவது:,

படகுத் தளம் விரிவாக்கம்

கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாத் தலம் என்ற அந்தஸ்தை பெறுவதற்கு முதல் காரணமாக திகழ்வது விவேகானந்தர் மண்டபம் தான்.

இம்மண்டபத்தை பார்வையிடுவதற்காக மேற்கொள்ளப்படும் படகு சவாரி, பிற சுற்றுலா தலங்களில் இல்லாத சிறப்பம்சமாகும். சீஸன் நேரத்தில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பேருக்கு மேல் படகு சவாரி செய்ய காத்திருந்தும், டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

தற்போது, விவேகானந்தர் பாறை படகு தளத்தை விரிவுபடுத்தி கூடுதல் படகு இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இப்பணிகள் முடிந்து, கூடுதலாக படகுகள் இயக்கப்படும் போது சீஸன் காலத்திலும் ஏமாற்றமின்றி சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல முடியும். இதன் மூலம் படகு சவாரி மேற்கொள்வோரின் எண்ணிக்கை 30 சதவீதம் வரை அதிகரித்து, சுற்றுலா பன்மடங்கு வளர்ச்சியடையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x