Published : 15 Sep 2017 01:21 PM
Last Updated : 15 Sep 2017 01:21 PM
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் இன்று (செப். 15) கொண்டாடப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் அதிமுக அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அண்ணா சாலையில் போக்குவரத்து மிகுந்திருந்ததால் போலீஸார் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடற்கரைக்குச் செல்லும் ஏராளமான பேருந்துகள் பாதை மாற்றி விடப்பட்டன. நான்கு சக்கர வாகனங்கள் அண்ணா சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்து கொண்டேதான் செல்ல முடிந்தது. இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
அவ்வேளையில் பெரியார் சிலையில் இருந்து அண்ணா சாலையில் வந்துகொண்டிருந்தது ஓர் ஆம்புலன்ஸ் வாகனம். மிகுதியான போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் செல்ல வழி கிடைக்கவில்லை. ஆம்புலன்ஸில் சிகிச்சை தேவைப்படுபவர்கள் உள்ளே இருந்தபோதும் சுமார் 20 நிமிடங்கள் சாலையிலேயே தத்தளித்து நின்றது.
கடும் முயற்சிக்குப் பிறகே, ஆம்புலன்ஸ் நெரிசலில் இருந்து மீண்டு மருத்துவமனை சென்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT