Published : 23 Apr 2023 11:58 AM
Last Updated : 23 Apr 2023 11:58 AM
சென்னை: "தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், இந்த ஒலிநாடா பொய்யானது, யார் குரலில் வேண்டுமானாலும் இப்படிப் பேசி வெளியிட முடியும் என்று சமாளித்துக் கொண்டிருப்பதால், அவர் அந்த ஒலி நாடாவில் பேசிய அதே கருத்துகளை நான் பேசுவதைப் போல ஒரு ஒலி நாடாவை வெளியிடுமாறு சவால் விடுகிறேன்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம், ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாகப் பேசியிருந்த ஒலி நாடாவின் உண்மைத் தன்மையை, சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக் கோரி, தமிழக பாஜக தலைவர்கள் குழு ஒன்று, ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று (ஏப்.23) சந்திக்கவுள்ளது.
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், இந்த ஒலிநாடா பொய்யானது, யார் குரலில் வேண்டுமானாலும் இப்படிப் பேசி வெளியிட முடியும் என்று சமாளித்துக் கொண்டிருப்பதால், அவர் அந்த ஒலி நாடாவில் பேசிய அதே கருத்துகளை நான் பேசுவதைப் போல ஒரு ஒலி நாடாவை வெளியிடுமாறு சவால் விடுகிறேன். என்னுடைய குரல் மாதிரியை ஆய்வுக்கு நான் வழங்க தயார்.
தமிழக நிதியமைச்சரும் தனது குரல் மாதிரியை வழங்க வேண்டும். இரண்டு ஒலி மாதிரிகளையும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடக்கும் விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம். இரண்டு ஒலி நாடாக்களின் உண்மைத் தன்மையை, நீதிமன்றம் விசாரித்துக் கூறட்டும்.
காலகாலமாக பதவிகளை எல்லாம் வாரிசுகள் அனுபவித்துக் கொண்டு, தனது கட்சித் தொண்டர்களை போஸ்டர் மட்டுமே ஒட்டவைத்து ஏமாற்றுவது போல, இது அத்தனை எளிதானதல்ல என்பதை தமிழக நிதியமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் சொல்லும் விசித்திரக் கதைகளை, வேறு வழியில்லாமல் உங்கள் கட்சியினர் நம்பலாம். ஆனால், நீங்கள் என்ன கதை சொன்னாலும் நம்புவதற்கு, நம் தமிழக மக்கள் ஒன்றும் திமுகவினர் அல்ல; அவர்களின் புத்திசாலித்தனத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் தமிழக நிதியமைச்சரை மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், செய்தியாளர் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஆடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆங்கில உரையாடலுக்கான தமிழ் மொழிபெயர்ப்பும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. இந்தச் சூழலில் அது ‘போலியானது’ என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் கொடுத்துள்ளார். | வாசிக்க > ஆடியோ விவகாரம் | ‘போலியானது’ - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...