Published : 23 Apr 2023 06:34 AM
Last Updated : 23 Apr 2023 06:34 AM
சென்னை: தமிழகத்தில் 2016 - 21ம் ஆண்டு காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்ட பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில், 18 ஊராட்சி ஒன்றியங்களில் மட்டும் ரூ.50 கோடியே 28 லட்சம்முறைகேடாக செலவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கணக்குதணிக்கைத் துறை தலைவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட, இந்திய கணக்கு தணிக்கை துறை தலைவர் அறிக்கையில், பிரதமர் குடியிருப்புத் திட்டம் தொடர்பாக கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் 2016 - 21-ம் ஆண்டு காலகட்டத்தில் 5 லட்சத்து 9 ஆயிரம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 2 லட்சத்து 80 ஆயிரம் வீடுகள் மட்டுமே (55 சதவீதம்) நிறைவு பெற்றுள்ளன. 89 ஆயிரம் பயனாளிகளுக்கு முதல் தவணை வழங்கப்படவில்லை.
நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றாததால் இந்திய அரசின் ரூ.1,515 கோடி உதவியை, உரிய நேரத்தில் தமிழக அரசால் பெற முடியவில்லை. ஒதுக்கப்பட்ட நிர்வாக நிதியில் இருந்து விளம்பரங்கள், திட்டத்துக்குத் தொடர்பில்லாத பிற செயல்பாடுகளுக்கு ரூ.2 கோடியே 18 லட்சம் ஏற்றுக்கொள்ள முடியாத செலவினத்தை ஊரக வளர்ச்சி இயக்குநர் செய்துள்ளார்.
பயனாளியை அடையாளம் காண்பதற்கு அடிப்படையான தரவில் உள்ள குறைபாட்டை தவறாகப் பயன்படுத்தி, கணிசமான எண்ணிக்கையிலான வீடுகள் முறைகேடாக அனுமதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு 18 ஊராட்சி ஒன்றியங்களில் மட்டும், பயனாளிகளுக்கு 3,354 வீடுகள் முறைகேடாக ஒப்படைக்கப்பட்டன. இதில் ரூ.50 கோடியே 28 லட்சம் முறைகேடான செலவு ஏற்பட்டது. மாநில அளவில் ஆய்வு மேற்கொண்டால், முறைகேடாக அனுமதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.
பெருமளவிலான கள ஆய்வு பதிவுகள் நேர்மையற்ற முறையில் கையாளப்பட்டன. தணிக்கையில் புவிசார் குறியீடு முறை மற்றும், வீட்டின் புகைப்படங்களின் நேர முத்திரையில் பல முரண்பாடுகள் காணப்பட்டன. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT