Last Updated : 11 Sep, 2017 11:36 AM

 

Published : 11 Sep 2017 11:36 AM
Last Updated : 11 Sep 2017 11:36 AM

விருதுநகர் மாவட்டத்தில் நலிவடைந்துவரும் கரிமூட்டம் தொழில்: உரிய விலை கிடைக்காமல் தொழிலாளர்கள் தவிப்பு

உரிய விலை கிடைக்காததால், விருதுநகர் மாவட்டத்தில் கரிமூட்டத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போதிய வருமானம் இல்லாததால் இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மளிகைப் பொருள்கள் வர்த்தகம், எண்ணெய் உற்பத்தி, மிளகாய் வத்தல் உற்பத்தி மட்டுமின்றி, கரிமூட்டத் தொழிலிலும் விருதுநகர் மாவட்டம் சிறந்து விளங்கி வருகிறது. சொந்த நிலமின்றியும், நிலம் வைத்திருந்தும் போதிய தண்ணீர் வசதியின்றி விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருப்போரும், காட்டுப் பகுதிகளிலும் சாலையோரங்களிலும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் சீமைக் கருவேல மரங்களை வெட்டி, அதை கரிமூட்டம் போட்டு விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கரிமூட்டத் தொழில் கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெட்டப்பட்ட சீமைக் கருவேல மரங்களை அளவு மற்றும் தரம் வாரியாகப் பிரித்தெடுத்து அவற்றை சீராக அடுக்கிவைத்து, களிமண்ணால் மூடி தீவைத்து மூட்டம் போடுவர். சுமார் ஒரு வாரம் வரை மூட்டம் போடப்பட்ட பின்னர், அதில் தண்ணீர் ஊற்றி அணைத்து மெல்ல பிரித்தெடுக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

அவ்வாறு மூட்டம்போட்டு பிரித்தெடுக்கப்படும் கரி, தூள்கரி, தூர்கரி, உருட்டுகரி, குச்சிகரி, மண் கரி என 5 வகையாக தரம் பிரிக்கப்படும். இதில் தூள்கரி, மண்கரி ஆகியவை ஊதுபத்தி, கொசுவர்த்திச் சுருள் போன்றவற்றை தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருளாகவும், உருட்டுகரி, குச்சிகரி போன்றவை தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலும், ஹோட்டல்களிலும், தூர்கரி இரும்பு உருக்கும் ஆலைகள், ஹோட்டல்கள், பட்டறைகள் போன்றவற்றுக்கும், சிறிய அளவிலான கரித்துண்டுகள் ஹோட்டல்கள், வண்டிப் பட்டறைகள் போன்றவற்றிற்கும், கரித்தூள்கள் சிமெண்ட் ஆலைகளிலும் பயன்படுத்தப்படும்.

சிமெண்ட் தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருள்களில் ஒன்று கரித்தூள் என்பதால் இதற்கு எப்போதும் தேவை உண்டு. ஆனால், அண்மை காலமாக கரித்துண்டுகள் மற்றும் கரித்தூளுக்கான தேவை பெருமளவில் குறைந்துள்ளதால் கரிமூட்டத் தொழிலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதோடு இதை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

தேவை குறைந்தது

இதுகுறித்து திருச்சுழி பகுதியைச் சேர்ந்த முனியசாமி(47) கூறியதாவது:

நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள ஹோட்டல்களில் கரித்துண்டுகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது காஸ் அடுப்புகளையும், சோலார் அடுப்புகளையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால் கரித்துண்டுகளுக்கான தேவை குறைந்துவிட்டது.

11-MA-MAN- Kari muttam Photo-2 முனியசாமி

மேலும், இத்தொழிலில் வேலை அதிகம் என்பதாலும், கிடைக்கும் லாபம் மற்றும் கூலி குறைவு என்பதாலும் இத்தொழிலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

செலவு அதிகம்

சீமைக் கருவேல மரங்களை வெட்டிவந்து கொடுக்கும் தொழிலாளிக்கு கொடுக்க வேண்டிய கூலி, கரிமூட்டம் போட தேவையான பரந்த இடம், வண்டிக்கணக்கில் விலைக்கு வாங்கவேண்டியுள்ள செம்மண், மூட்டத்தை ஆற்ற டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டுவருவது போன்ற செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் செய்தாலும் கரித்துண்டுகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. தற்போது பலத்த மழை பெய்து வருவதால் இத்தொழில் மேலும் பாதிப்படைந்துள்ளது.

இதனால், இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x