Published : 23 Apr 2023 12:50 AM
Last Updated : 23 Apr 2023 12:50 AM
சென்னை: தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், செய்தியாளர் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஆடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆங்கில உரையாடலுக்கான தமிழ் மொழிபெயர்ப்பும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. இந்த சூழலில் அது ‘போலியானது’ என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் கொடுத்துள்ளார்.
"உதயநிதியும், சபரீசனும் ஒரே வருடத்தில், அவர்களது மூதாதயரை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். இப்போது அது பிரச்சினையாகி வருகிறது. இதை எப்படி கையாள்வது? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது? 10 கோடி, 20 கோடி என சிறுக சிறுக குவித்தது, அது தோராயமாக 30,000 கோடி ரூபாய் இருக்கும்" என்று அந்த ஆடியோவில் தெரிவிக்கப்படிருந்தது. இதற்கு பாஜக தரப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இடம் விளக்கம் கேட்கப்பட்டது.
இந்த சூழலில் சர்ச்சைக்குள்ளான அந்த ஆடியோ குறித்து அறிவியல் பூர்வமான விளக்கம் கொடுத்துள்ளார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அந்த ஆடியோ முழுக்க முழுக்க போலியானது என அவர் தெரிவித்துள்ளார்.
“சமூக வலைதளத்தில் என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நான் எதிர்வினையாற்றவில்லை. எனக்கு அமைச்சரவையில் ஒதுக்கப்பட்டுள்ள இலாக்காவில் கவனம் செலுத்தும் வகையில் நான் ஈடுபட்டு வருகிறேன். மார்ச் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறேன். என்னுடைய பொது வாழ்வில் நான் செய்த அனைத்தும் எனது தலைவரும், மாண்புமிகு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினால் தான். எங்களை பிரிப்பதற்கான எந்தவொரு நாச வேலையும் வெற்றி பெறாது.
அந்த ஆடியோ முழுக்க முழுக்க போலியானது. அது போலி என்பதற்கான தொழில்நுட்ப ரீதியான ஆதாரமும் உள்ளது” என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
26 நொடிகள் கொண்ட அந்த ஆடியோவில் முதல் சில நொடிகள் வேறொரு கிளிப்பில் இருந்து எடுத்தது எனவும். எஞ்சிய நொடிகளில் குரல் தெளிவாக இல்லை என்றும். வேண்டுமென்றே டோன் குறைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இது தொலைபேசி அழைப்புக்கான பேக்ரவுண்ட் நாய்ஸ் எதுவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
My statement on the 26-second malicious fabricated audio clip pic.twitter.com/KM85dogIgh
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT