Last Updated : 22 Apr, 2023 05:24 PM

5  

Published : 22 Apr 2023 05:24 PM
Last Updated : 22 Apr 2023 05:24 PM

“கிருஷ்ணகிரியை வன்கொடுமைப் பகுதியாக அறிவிப்பீர்; ஆணவக் கொலை தடுப்பு சட்டம் இயற்றுவீர்” - திருமாவளவன்

கிருஷ்ணகிரி: ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்றும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை வன்கொடுமைப் பகுதி என்று அறிவிக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.

கிருஷ்ணகிரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை நிறைவேற்றிட வலியுறுத்தியும், ஊத்தங்கரை அருணபதியில் நடந்த படுகொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். முன்னதாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "கிருஷ்ணகிரி மாவட்டம் ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடைபெறும் மாவட்டமாக உள்ளது. ஏற்கெனவே சுவாதி - நந்தீஸ் இருவருமே கொடூரமாக கொல்லப்பட்டு, மைசூர் அருகே ஆற்றில் தூக்கி எறியப்பட்டார்கள்.

அண்மையில் ஜெகன் - சரண்யா. இருவரும் ஒரே சமூகத்தை சார்ந்தவர்கள். விரும்பி திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் சமூகத்திற்குள்ளேயே உட்சாதி முரண் அடிப்படையில் ஜெகன் பட்டப்பகலில் நெடுஞ்சாலையோரம் வெட்டி கொல்லப்பட்டார். ஊத்தங்கரை அருகே அருணபதி என்ற கிராமத்தில் சுபாஷ் -அனுசுயா ஆகிய இருவரும் விரும்பி திருமணம் செய்துகொண்ட நிலையில், சுபாசின் தந்தை தண்டபாணி, பெற்ற மகனையே கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். தடுக்க வந்த அவரது தாயார் கண்ணம்மாளையும் படுகொலை செய்துள்ளார்.

தலித் பெண்ணான அனுசுயாவை அவர் கொடூரமாக வெட்டியதில், படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த 3 சம்பவங்களும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே நடந்திருக்கிறது. தமிழகத்தில் இதுபோன்ற சாதி ஆணவக் கொலைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. வழக்கமாக வட இந்திய மாநிலங்களில்தான் கலப்பு திருமணம் செய்யும் தம்பதிகளை பெற்றோர்களே கொடூரமாக கொலை செய்து, பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்தி, சித்ரவதை செய்து, விஷம் கொடுத்து கொலை செய்வதை கேள்விபட்டிருக்கிறோம்.

தொடர் சம்பவங்கள்... - தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்திருக்கிறது என்றாலும் கூட, தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்மைக் காலமாக நடந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு முன்பு திவ்யா - இளவரசன், இளவரசன் கொல்லப்பட்டார். சங்கர் - கவுசல்யா, இதில் சங்கர் கொல்லப்பட்டார். கோகுல்ராஜ் சந்தேகத்தின் பேரில், காதலிக்கிறான் என்று கடத்தி செல்லப்பட்டு கொடூரமாக கழுத்தை அறுத்து படுகொலை செய்தார்கள். இதற்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் கண்ணகி - முருகேசன், விஷம் கொடுத்து படுகொலை செய்தார்கள். இப்படி எண்ணற்ற பல ஆணவ கொலைகள் நடத்திருக்கின்றன. இந்திய அளவிலும், இது தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனையளிக்கிறது.

ஆணவக் கொலையை பொருட்டாகவே மதிப்பதில்லை: ஆகவே, இந்திய அரசு ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற குரல் தொடர்ந்து ஒலித்து வருகிறது. ஆனாலும், இந்திய அரசு சட்டம் இயற்றுவதில் தயக்கம் காட்டி வருகிறது. உச்ச நீதிமன்றம் ஆணவக் கொலைகளை கொடூரமான கொலைகள். தடுக்க வேண்டும் என்பதற்காக சில வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. எத்தனையோ பல தீர்ப்புகளில் இது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, அதை மீற முடியாது என்று காரணம் காட்டுபவர்கள், இந்த ஆணவக் கொலைகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

வன்கொடுமை பகுதி அறிவிக்க... - இந்த நிலையில்தான் விசிக கட்சியின் சார்பில் தொடர்ந்து ஆணவக் கொலைகள் சம்பந்தமாக ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று இந்த இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறோம். தற்போது திமுக அரசு தமிழகத்தை ஆட்சி கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், தோழமை கட்சி என்ற அடிப்படையில், தமிழ்நாடு அரசுக்கு இந்தச் சட்டத்தை இயற்றுவதற்கான அதிகாரம் இருக்கிறது என்கிற நிலையில், ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று, அதற்கான அடையாள ஆர்ப்பாட்டம்தான் இன்று கிருஷ்ணகிரியில் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் இதுபோன்ற கொடூரமான வன்கொடுமைகள் அரங்கேற்றுகின்ற மாவட்டமாக உள்ளது. எனவே, ஒட்டுமொத்தமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை வன்கொடுமை பகுதி என்று அறிவிக்க வேண்டும் என விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறது.

திமுக நம்பகத்தன்மையை கேள்விகுறி - மேலும் நேற்று சட்டப்பேரவையில் தொழிலாளர்களுக்கு விரோதமான ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 8 மணி நேரம் வேலை என்கிற தொழிலாளர்களின் உரிமையை பறிக்கின்ற வகையில், 12 மணி நேர வேலை என்கிற ஒரு மசோதாவாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக., மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி போன்ற தோழமை கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்த நிலைபாடு திமுகவின் தொழிலாளர் நலனுக்கான கொள்கைகளுக்கு எதிராக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது திமுகவின் நம்பகத்தன்மையை கேள்விகுறியாக்கும்.

மேலும், தமிழக முதல்வர், இதில் உடனடியாக ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். இந்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தோழமைக் கட்சிகள் சார்பில் தமிழக முதல்வரை சந்தித்து இது குறித்து எமது கருத்துக்களை வலியுறுத்த இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

நிதியுதவி: கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை நிறைவேற்றிட வலியுறுத்தி, வி.சி.கட்சியின் தலைவர் தொல்.திருமாளவன் எம்பி., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் கனியமுதன் வரவேற்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாலாஜி எம்எல்ஏ., மண்டல செயலாளர் நந்தன், தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்செல்வன், மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன், சுபாஷ்சந்திரபோஸ், ஜானகிராமன், ஜெயந்தி, வசந்த், ஜெயசந்திரன், முனிராவ், ராதாகிருஷ்ணன், மோகன், செல்வம், செந்தமிழ், தமிழ்வளவன், அய்யாவு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், கிருஷ்ணகிரி அருகே கொலை செய்யப்பட்ட ஜெகனின் பெற்றோர்கள் மற்றும் ஊத்தங்கரை அருணபதி கிராமத்தில் சுபாஷின் மனைவியான அனுசுயா குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான தொகையை கட்சியினர் வழங்கிட வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டார். அவ்வாறு வசூல் செய்யப்பட்ட மொத்த தொகையான ரூ.5 லட்சத்து 26 ஆயிரத்தில், ரூ.2 லட்சத்தை ஜெகனின் பெற்றோரிடமும், ரூ.3 லட்சத்து 26 ஆயிரத்தை சுபாஷின் மனைவியான அனுசுயாவின் பெற்றோரிடமும் வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x