Published : 22 Apr 2023 12:32 PM
Last Updated : 22 Apr 2023 12:32 PM
சென்னை: தொழிலாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள, 12 மணி நேர வேலை மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மநீம சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,"உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 18 முதல் 20 மணி நேரம் வரை கடும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதை எதிர்த்து பல்வேறு நாடுகளிலும் கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டு, ஏராளமானோரின் உயிர்த் தியாகங்களுக்குப் பிறகு 8 மணி நேர வேலை என்ற அடிப்படை உரிமை கிடைத்தது. 1945-ல் இந்தியத் தொழிலாளர்களுக்குச் சட்டப்பூர்வமாக 8 மணி நேர வேலை உரிமையை டாக்டர் அம்பேத்கர் பெற்றுத் தந்தார்.
தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை 6 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். ஆனால், தற்போதைய தமிழக அரசு, எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, 12 மணி நேர வேலை மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களின் நலனுக்காக, தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுவரக் கருதி இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொழிலாளர்கள் நலனுக்கு எதிரானது மட்டுமல்ல, தொழிற்சங்கங்கள் போராடிப் பெற்ற அடிப்படை உரிமையைப் பறிப்பதாகவும் உள்ளது. ஏற்கெனவே தனி மனித மகிழ்ச்சிக்கான அளவீட்டில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பின்தங்கியுள்ள நிலையில், 12 மணி நேரம் இயந்திரம்போல உழைப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கும். நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த காலத்தில், தொழிலாளர்களின் பணி நேரம் குறைய வேண்டுமே தவிர, அதிகரிக்கக் கூடாது. அதுவே மானுடம் வளர்ந்ததற்கான அடையாளம்.
லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பன்னாட்டு முதலாளிகளுக்காக, தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே, தொழிலாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் 12 மணி நேர வேலை மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...