Published : 22 Apr 2023 04:18 AM
Last Updated : 22 Apr 2023 04:18 AM
சென்னை: ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் இஸ்லாமிய பெருமக்களின் வாழ்வில் இன்பமும், நலமும் நிறைந்து இனிமை பெருகட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: நபிகள் காட்டிய சமத்துவ சமுதாயம்அமைக்கும் பணியில் சமரசமின்றிதனது பயணத்தை திமுகவும், அரசும் தொடர்கிறது. என்றென்றும் தொடரும். நபிகள் போதித்தவழி நின்று நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரம்ஜான் கொண்டாடும் முஸ்லிம் சமூகத்தினர் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த ரம்ஜான் வாழ்த்துகள். அவர்களின் வாழ்வில் என்றென்றும் இன்பமும், நலமும் நிறைந்து இனிமை பெருகட்டும்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாதஇதயமே பரிசுத்தமான இதயம் என்று நபிகள் நாயகம் உலகுக்கு பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளை செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: நபிகள் நாயகத்தின் போதனைகளை தொடர்ந்து கடைபிடித்து, உலகில் அமைதியும் சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: அரசமைப்புச் சட்டத்தின்படி சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்படுமானால், ராகுல் காந்தி தலைமையில் நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரண்டு சிறுபான்மை மக்களின் உரிமைகளை காப்பார்கள் என்பதை ரம்ஜான் செய்தியாக தமிழககாங்கிரஸ் கட்சி கூற விரும்புகிறது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இறைநம்பிக்கையுடன் நபிகள் நாயகத்தின் தியாகம், நன்மை, ஒழுக்கநெறி உள்ளிட்ட நற்செயல்களை அனைவரும் கடைபிடித்து நல்வழியில் பயணிப்போம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: உலககெங்கும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகைஉள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற் றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் இந்த புனிதமான நாளில் அனைவரும் உறுதியேற்போம்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மனித சமுதாயத்தில் அன்பு, வாய்மை, வாஞ்சை, நேர்மை, பொறுமை, திறமை, ஒற்றுமை, மனிதநேயம், சகோதரத்துவம் பெரிதும் வளர்ந்தோங்கிட வாழ்த்துகள்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற அடிப்படையில் ஏழை, எளியவர்கள் மீது பரிவுகாட்டி, உண்ண உணவளித்து, தானதர்மங்கள் செய்து, புனிதநோன்பினை முடித்து ரம்ஜான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமியமக்களுக்கு வாழ்த்துகள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர்மொகிதீன்: மனித நேயத்தை வளர்க்கும் நோன்பை நோற்றவர்கள், மனித மாண்பை வளர்ப்பவர்கள் ஆவார்கள். மானிடம் முழுவதிலும் நட்பும், நல்லுறவும், நேயமும், நல்லெண்ணமும் பல்கிப் பெருகிட வாழ்த்துவோம்.
இதேபோல், சமக, அமுமக, ஐஜேகே, பெருந்தலைவர் மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தேசிய முன்னேற்ற கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி, கோகுல மக்கள் கட்சி, ஜமியத் உலமா ஹிந்த், இந்திய தேசிய லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் ரம்ஜான் வாழ்த்து கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT